Published : 20 Dec 2019 07:18 PM
Last Updated : 20 Dec 2019 07:18 PM
உள்ளாட்சித்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்கள் சின்னத்தை சொல்லியும், வாக்குறுதிகளைப் பட்டியலிட்டும் ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கிறது. இந்தத் தேர்தலில் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக இந்த முறை படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவு போட்டியிடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’, ‘டிக் டாக்’, இன்ஸ்ட்ரா கிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர்.
தற்போது வேட்புமனு தாக்கல் முடிந்தநிலையில் அவர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டன. சின்னங்கள் கிடைத்த கையோடு அவர்கள், தங்கள் வாக்குறுதிகளையும், சின்னத்தையும் ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
சில வேட்பாளர்கள், தங்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க செல்வதையும், அவர்களிடம் செய்யும் பிரச்சாரத்தையும் கூட ‘பேஸ்புக்’கில் லைவ்வாக ஒளிபரப்புகின்றனர். இணைய வாசிகளும், அவரது வார்டு பகுதி மக்களும், நண்பர்களும் அவர்களுக்கு வெற்றிப்பெற வாழ்த்துகள் தெரிவித்து நம்பிக்கையையும், ஊக்கத்தையும் ஏற்படுத்துகின்றனர்.
தற்போது வாக்காளர்கள் அனைவரும் பெரும்பாலும் செல்போன்கள் வைத்துள்ளனர். அதில், ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ் அப்’ கண்டிப்பாக வைத்துள்ளனர். அதனால், வேட்பாளர்கள் தங்கள் பகுதி வாக்காளர்கள் பட்டில் எடுத்து, அவர்கள் செல்போன்களை பெற்று, அவர்களைக் கொண்டு தனித்தனி குரூப்புகளை உருவாக்கியும், தனிப்பட்ட முறையில் ‘வாட்ஸ் அப்’ மெசஞ்சரில் அனுப்பியும் தங்களுக்கு வாக்களிக்க ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து வேட்பாளர்கள் கூறுகையில், ‘‘தேர்தல் பிரச்சாரத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனி நபராக ஒவ்வொரு வேட்பாளர்களையும் பார்க்க முடியவில்லை. அப்படி சென்றால் பின்தொடர்ந்து மற்ற கட்சியினர் வந்து ஏதோ வாக்கிற்கு பணம் கொடுப்பதாக நினைத்து பிரச்சினை செய்கின்றனர்.
வாக்காளர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவர்கள் பிரச்சனைகளை காது கொடுத்த கேட்டு, அதையே எங்களுடைய வாக்குறுதிகளை பட்டியலிட்டு அவர்களுக்கு ‘வாட்ஸ் அப்’ பண்ணுகிறோம். ‘பேஸ்புக்’கை இளைஞர்கள், படித்தவர்கள் மட்டுமே அதிகளவு பயன்படுத்துகின்றனர். அவர்கள் கவனத்தை ஈர்க்க பேஸ்புக்கில் பொதுவாக ஆதரவு கேட்டு ஒரு பதிவும், அந்த பேஸ்புக் கணக்காளர் எங்கள் பகுதி வாக்காளராக இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்கள் மெசஞ்சருக்கு ஒரு தகவலும் அனுப்புகிறோம்.
அவர்களும், அதில் உள்ள நிறை, குறைகளையும் எங்களிடம் தெரிவிக்கின்றனர். ஒரு கலந்துரையாடல் மூலம் வாக்கு சேகரிக்க இந்த சமூக வலைதளங்கள் மிகுந்த உதவியாக இருக்கிறது.
நாங்களும் பொதுவெளியில் வாக்குறுதிகளை பட்டியலிடுவதால் நாளை நாங்கள் வெற்றிப்பெற்று அதை நிறைவேற்றாமல் இருக்க முடியாது.
நிறைவேற்றாவிட்டால் பொதுவெளியில் எங்கள் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு அவர்கள் எங்களை விமர்சனம் செய்ய முடியும். அதனால், நாங்கள் வாக்குறுதிகளை வாக்காளர்கள் ஒரளவு நம்பவும் செய்கின்றனர். நேரடியாக சந்திக்க முடியாத வாக்காளர்களை எங்கள் வாக்குறுதிகள் இந்த சமூக வலைதளங்கள் மூலம் சென்றடைய வாய்ப்புள்ளது, ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT