Published : 07 May 2014 12:00 AM
Last Updated : 07 May 2014 12:00 AM

பெல் தொழிற்சாலையில் செல்போன் குண்டு கண்டெடுப்பு: நிபுணர்குழுவினர் செயல் இழக்கச் செய்தனர்

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் பெல் தொழிற்சாலையில் செல்போன் குண்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மே 1-ம் தேதி நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் உருவம் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது. இதையடுத்து, இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் வேலூர் மாவட்டத்தில் பதுங்கியுள்ளார்களா என்பது குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள மத்திய அரசின் பெல் தொழிற்சாலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று சாலையில் கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற அன்சர் (40) என்பவர் தற்செயலாக பாட்டிலை கையில் எடுத்துப் பார்த்துள்ளார். அது வெடிகுண்டு என தெரிந்ததும் பயத்தில் தூக்கி வீசியுள்ளார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெல் நிறுவன தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

அருகில் யாரும் வராதபடி தடுப்புகள் அமைத்து அந்த பகுதியை போலீஸாரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்தனர். சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர். 250 கிராம் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டில் மூடியில் சுமார் 6 அங்குல திரி பொருத்தப்பட்டிருந்தது.

பாட்டிலின் உள்ளே கருப்பு நிறத்தில் வெடிமருந்து இருந்தது. பாட்டிலின் மீது செல்போன் மற்றும் சிகரெட் பற்றவைக்கும் லைட்டர் வைத்து டேப்பால் சுற்றப்பட்டிருந்தது. செல்போன் மூலம் வெடிக்கச் செய்யும் வெடிகுண்டாக இது இருக்கலாம் என போலீஸார் முதலில் கருதினர். இதையடுத்து சென்னையில் இருந்து ‘மருதம்’ என்ற வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

வெடிகுண்டில் இருந்து அகற்றப்பட்ட செல்போன் ஐ.எம்.இ.ஐ எண் உதவியுடன் அந்த செல்போனின் உரிமையாளர் யார்? செல்போனில் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்ட எண்கள் மற்றும் அதில் பயன்படுத்திய சிம்கார்டு குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x