Published : 20 Dec 2019 05:17 PM
Last Updated : 20 Dec 2019 05:17 PM

வாக்குச்சாவடிகளுக்குள் வாக்காளர்கள் செல்போன்கள் கொண்டு வர தடை: ‘செல்ஃபி’, வீடியோ எடுப்பதை தடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

‘‘வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தன்னைத்தானே செல்போன்களை கொண்டு சுயமி (செல்ஃபி) அல்லது வீடியோ எடுப்பதை தலைமை தேர்தல் அலுவலர்கள் அனுமதிக்கக்கூடாது,’’ என்று மாநில தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், போலீஸார் ஆகியோர் கூட்டாக வாக்காளர்களை ஒழுங்குப்படுத்தவும், கண்காணிக்கவும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: *வாக்குச்சாவடிகளில் போலீஸார் தேர்தல் அலுவலர்கள் கட்டளையிடுகின்றவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். வாக்காளர்களை ஒழுங்குப்படுத்தி வாக்குச்சாவடிக்குள் அனுப்பவது போலீஸாரின் முக்கிய கடமை.

*மாற்றத்திறனாளி வாக்காளர்களையும், பிறர் உதவியின்றி நடமாட இயலாத நலிவுற்ற வாக்காளர்களையும், கைக்குழந்தையுடன் வரும் பெண் வாக்காளர்களையும், வரிசையில் நிற்கவிடாமல் முதலில் சென்று வாக்களிக்க அனுமதிக்கலாம்.

*ஆண், பெண் வாக்காளர்களை தனித்தனி வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கலாம். இதரர் பாலினத்தை(மூன்றாம் பாலினம்) சேர்ந்தவர்கள் அவர்கள் விரும்பும் வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

*வாக்குச்சாவடிக்குள் எவரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கூடாது.

*தேர்தல் தொடர்பாக பணியாற்றும் ஊழியர்கள், உயர் அலுவலர்கள், காவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஏனைய நபர்களை மட்டமே வாக்குச்சாவடிகளில் தலைமை தேர்தல் அலுவலர்கள் அனுமதிக்க வேண்டும்.

*வேட்பாளர்களுடன் அவர்களுடைய தேர்தல் முகவர் ஒருவரை மட்டுமே அனமதிக்கலாம். வாக்காளர்களுடன் வரும் குழந்தைகளையும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம். பிறர் உதவியுடன் நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளுடன் அவர்கள் துணையாக ஒருவரை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம்.

*வாக்குச்சாவடிக்குள் முகவர்களை வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாதபடி அமர வைக்க வேண்டும்.

*பொதுவாக காவலர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடு வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் அனுமதித்தால் மட்டுமே போலீஸார் உள்ளே வர வேண்டும்.

*வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தன்னைத்தானே செல்போன்களை கொண்டு சுய புகைப்படம்(செல்பி) அல்லது வீடியோ எடுப்பதை தலைமை தேர்தல் அலுவலர்கள் அனுமதிக்கக்கூடாது. வாக்காளர்கள் இந்த செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அவர்களை வாக்குச்சாவடிக்குள்ளே வாக்களிக்க அனுமதிக்கும்போது கை கேமரா அல்லது கேமரா வசதியுடன் கூடிய கைபேசி(செல்போன்) எடுத்து செல்ல அனுமதிக்ககூடாது.

இவ்வாறு அந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x