Published : 20 Dec 2019 04:32 PM
Last Updated : 20 Dec 2019 04:32 PM

அரசியலைத் துறந்து வந்தால் பரிசீலிப்போம்; கண்டவர்களும் நுழைய கைலாசம் சந்தை மடமல்ல: சீமானுக்கு 'கைலாஷ் பிரதமர் அலுவலகம்' பதில்

அரசியலைத் துறந்து அம்மன் பாதம் வணங்கி வந்தால் பரிசீலிக்கலாம். கண்டவர்களும் நுழைய கைலாசம் சந்தை மடமல்ல என சீமானுக்கு 'கைலாஷ் பிரதமர் அலுவலகம்' பதிலளித்துள்ளது.

குஜராத் போலீஸாரால் தேடப்படும் நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். ஈக்வடாரில் தீவு வாங்கி கைலாசா என ஒரு நாட்டை அமைக்க ஐநாவில் அனுமதி கோரியுள்ளார் என்றெல்லாம் செய்தி வெளியானது. ஈக்வடார் தூதரகம் அதற்கு மறுப்பு வெளியிட்டது.

நித்யானந்தா எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என உளவுத்துறை கைவிரித்தது. நித்யானந்தா தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வருகிறார். தன்னை அதிபராக அறிவித்துப் பேசி வருகிறார்.

இந்நிலையில், ட்விட்டரில் பிஎம்ஓ கைலாஷ் என்று ஆரம்பித்து கைலாஷ் பிரதமர் அலுவலகம் போல் தகவல்களையும் பரிமாறி வருகின்றனர்.

இதனிடையே சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பேச்சில் நித்யானந்தாவைக் குறிப்பிட்டார்.

அவரது பேச்சில் “ குடியுரிமைச் சட்டம் என்.ஆர்.சி வந்த பின்னர் நான் பதிவு செய்ய வரும்போது அனைத்து ஆவணங்கள் கொடுத்தாலும் தூக்கிப் போட்டுவிட்டு உனக்குக் குடியுரிமை இல்லை என்பார்கள். கொடுத்துடு பாஸ்போர்ட்டை கொடுத்துடு ஓடிப் போய்விடுகிறேன் என்றுதான் சொல்கிறேன்.

எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை ராஜா, கைலாஷ்னு ஒரு நாடு உருவாயிடுச்சு. குடியுரிமையற்ற ஆளாக ஆக்கினால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. எங்களுக்கு எங்கள் அதிபர் நித்யானந்தா இருக்காரு. அவரு கைலாஷ்னு ஒரு நாட்டை உருவாக்கிட்டாரு. நாங்க அங்க போய் அழகா இருந்துக்குவோம். எந்தப் பிரச்சினையும் இல்லை. பைத்தியக்காரர்கள் கையில் சிக்கிக்கொண்டு இந்த நாடும் மக்களும் படும்பாடு இருக்கே! தாங்க முடியவில்லை.


முன்பெல்லாம் எனக்குக் கோபம் கோபமாக வந்தது. இப்பல்லாம் சிரிப்புதான் வருது. சிரித்தே சமாளிக்க வேண்டியதாக உள்ளது” என்று சீமான் பேசினார்.


சீமான் பேசியதற்கு ட்விட்டரில் கைலாஷ் பிரதமர் அலுவலகம் என்கிற ட்விட்டர் பக்கத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்!!!.
- பிரதமர் அலுவலகம், ஸ்ரீ கைலாஷ்”.

எனப் பதிவிடப்பட்டுள்ளது.

உண்மையில் கைலாஷ் பிரதமர் அலுவலகம் என்று எதுவும் இல்லை. நித்யானந்தா கைலாச நாட்டை உருவாக்கி வருவதாகக் கூறியுள்ள நிலையில், கைலாஷ் பிரதமர் அலுவலகம் என்று ட்விட்டர் பக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தை உருவாக்கியவர் குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை.

ஆனாலும், கைலாஷ் பிரதமர் அலுவலகம் என்ற பெயரில் மேற்கண்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்குக் கீழே நெட்டிசன்கள் கடுமையாகக் கிண்டலடித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x