Published : 20 Dec 2019 08:46 AM
Last Updated : 20 Dec 2019 08:46 AM

ஊரக உள்ளாட்சி மனுக்களை திரும்பப் பெற அவகாசம் நிறைவு: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு; பிரச்சாரம் இன்று தொடங்குவதால் அனல் பறக்கும் தேர்தல் களம்

சென்னை

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர்கள் இன்றே பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வந்தன. 16-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

அதில், கிராம ஊராட்சி வார்டுஉறுப்பினர் பதவிகளுக்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 657 மனுக்கள், கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 54 ஆயிரத்து 747 மனுக்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 32 ஆயிரத்து 939 மனுக்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 992 வேட்புமனுக்கள் என மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. அதில் முறையாக பூர்த்திசெய்யப்படாத ஏராளமான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப்பெற நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்பு மனுக்களை திருப்பப் பெறுவதற்கான அவகாசம் மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வேட்பாளர் பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

அதைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு, அக்கட்சிகளின் சின்னம் ஒதுக்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளர்களுக்கு விதிகளின்படி சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

பிரச்சாரம் தீவிரம்

அந்தந்தப் பகுதிகளுக்கான வேட்பாளர்கள் உறுதியான நிலையில், அனைத்து வேட்பாளர்களும் இன்று பிரச்சாரத்தை தொடங்குகின்றனர். முதல்கட்டமாக 27-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில், 25-ம் தேதி மாலை வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும். பிரச்சாரத்துக்கு 6 நாட்கள் மட்டுமே உள்ளதால், வேகமாக பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான வியூகங்களை வேட்பாளர்கள் வகுத்து வருகின்றனர். இன்றுமுதல் பிரச்சாரம் தீவிரமடைவதால், தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கஏதுவாக ஏற்கெனவே, சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலதேர்தல் ஆணைய அலுவலகத்தில், அனைத்து நாட்களிலும் இயங்கும்புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை, 18004257072, 18004257073, 18004257074 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மாநிலதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும், மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் புகார் பிரிவுகளை அமைக்க மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

வேட்பாளர் செலவினம் தொடர்பான விலைப்பட்டியலை தயார் செய்யவும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக வீடியோவில் பதிவு செய்யவும், அதை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்கவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, காவல் துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து பதட்டமான மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச் சாவடிகளைக் கண்டறியுமாறும், மாவட்ட அளவிலான பாதுகாப்புத் திட்டத்தை இறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x