Published : 19 Dec 2019 01:47 PM
Last Updated : 19 Dec 2019 01:47 PM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: மாநிலக் கல்லூரிக்கும் விடுமுறை அறிவிப்பு

கோப்புப் படம்

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்துவதை அடுத்து சென்னை பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்தது. இந்நிலையில் மாநிலக் கல்லூரியும் விடுமுறையை அறிவித்துள்ளது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் வலுத்து வருகிறது. மாணவர்கள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் வலுத்ததை அடுத்து அந்தப் பல்கலைக்கழகத்துக்கு டிச.23 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விடுமுறையையும் சேர்த்து ஜன.2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஹாஸ்டலில் உள்ள மாணவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பல்கலைக்கழகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய மாணவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடற்கரைச் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதால் மாநிலக் கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.2-ம் தேதி கல்லூரி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாநிலக் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x