Published : 19 Dec 2019 10:43 AM
Last Updated : 19 Dec 2019 10:43 AM
மதுரை மாவட்ட அதிமுகவில் நிர்வாகிகள் மூன்று அணியாக பிரிந்து கிடப்பதால் ‘சீட்’ கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகளின் உள்ளடி வேலையால் வெற்றிவாய்ப்பு பறிபோய்விடுமோ என்று அதிமுக வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் மதுரை மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு, அதிமுக சொற்ப இடங்களே ஒதுக்கி உள்ளது. தேமுதிக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் கட்சிமேலிடத்தின் நிர்பந்தத்தால் அதிருப்தியை வெளிப்படுத்த முடியாமல் உள்ளாட்சித்தேர்தலில் பெரிய ஆர்வமில்லாமல் உள்ளனர்.
பாஜகவுக்கு மாவட்டத்தில் ஒரளவு திருப்தியான இடங்களை அதிமுக ஒதுக்கி உள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் முடிந்து வேட்பாளர்கள், வார்டுகளில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
மதுரையை பொறுத்தவரையில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்குள் கோஷ்டி பூசல் உள்ளது.
குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் மேயராக ராஜன் செல்லப்பா இருந்தபோது, மாநகராட்சி அரசு விழாக்களுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை அழைக்காமல் புறக்கணிப்பார். பதிலுக்கு செல்லூர் கே.ராஜூ, தன்னுடைய அரசு விழாக்களுக்கு மேயராக இருந்த ராஜன் செல்லப்பாவை அழைக்கமாட்டார். வெளிப்படையாகவே இருவரும் ஜெயலலிதா இருந்தபோதே ஒரே கட்சிக்குள் இருந்து கொண்டு எதிரெதிர் துருவங்களாக கோஷ்டி அரசியல் செய்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக தலைமை தலைகீழாக மாறி இருவருக்கும் இடையோன பகை மறைந்து நட்பாக மாறினர். மாவட்டத்தில்
இருவரும் தற்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கட்சியில் ஒரே அணியாக செயல்படுகின்றனர்.
ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்தியனுக்கு, எம்பி தேர்தலில் ‘சீட்’ கிடைத்ததிற்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் ஆதரவும் இருந்தது. அதனாலே, இருவரும் தற்போது அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் நெருக்கமாக செயல்படுகின்றனர்.
ஆனாலும், உள்ளுக்குள் இருவரும் ஒருவரை ஒருவர் வீழ்த்தும் திரைமறைவு காய் நகர்த்தலை செய்வதாக கூறப்படுகிறது. இந்த மூவர் தலைமையில் அவர்களது ஆதரவு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பல அணியாக பிரிந்து செயல்படுகின்றனர்.
அமைச்சர், மாவட்ட செயலாளர், எம்எல்ஏ-க்கள், கட்சியில் அனைத்து நிர்வாகிகளையும் திருப்திப்படுத்தமுடியாது. அனைவருக்கும் உள்ளாட்சித்தேர்தலில் கவுன்சிலர் ‘சீட்’ வழங்கவும் முடியாது. தற்போது மதுரை மாவட்ட அதிமுகவில் புறநகர் கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டத்திற்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடக்கிறது. இதில், ‘சீட்’ கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களாக இருக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏவுக்கு எதிராக, அவர்கள் தேர்வு செய்த வேட்பாளர்களை தோற்கடிக்க சில உள்ளடி வேலைகளை பார்ப்பதாக கூறப்படுகிறது. அதனால், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடம் அதிமுக வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தற்போது ‘சீட்’ கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள், நிரந்தரமாகவே கட்சிக்குள் தங்களுக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ- ஆகியோர் அழைத்து சரிகட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமமுக வேட்பாளர்கள் பிரிக்கும் வாக்குகள் அதிமுகவின் வாக்குவங்கியில் சரிவை ஏற்படுத்தும் நிலையில் தற்போது ‘சீட்’ கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள் உள்ளடி வேலையால் வெற்றி வாய்ப்பும் பறிபோகுமா? என்று அதிமுக வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘உள்ளாட்சித்தேர்தல் நேரத்தில் ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில் சில நிர்வாகிகள் ஆரம்பத்தில் சில மன வருத்தத்தில் இருக்கதான் செய்வார்கள். இது அதிமுகவில் மட்டுமில்லாது தேர்தல் நேரத்தில் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளிலும் நடக்கிற நிகழ்வுதான். தற்போது ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில் இருந்தவர்கள் சமாதானம் அடைந்துவிட்டார்கள். அவர்களுடன் வேட்பாளர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட தெடாங்கிவிட்டார்கள். கட்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அளவில் எந்த கோஷ்டிபூசலும் தற்போது இல்லை, ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT