Published : 19 Dec 2019 08:57 AM
Last Updated : 19 Dec 2019 08:57 AM
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுககூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் வரும் 23-ம் தேதி பேரணிநடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்க, திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன் ஆகிய 11 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
பொருளாதார நெருக்கடியால் மக்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை திசைதிருப்ப குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. 'எம்மதமும் சம்மதமே', 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயர்ந்த சிந்தனைகளின் கருவூலமான தமிழகத்தில் வாழ்ந்துவரும் தொப்புள்கொடி உறவுகளான ஒரு லட்சம்ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தையும், நாடெங்கும் உள்ள முஸ்லிம்களின் அமைதியான வாழ்வாதாரத்தையும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேள்விக்குறியாக்கியுள்ளது. முஸ்லிம்கள், ஈழத் தமிழர்கள் தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை என்பது பாஜக அரசின் மதவாதம் மட்டுமல்ல, அப்பட்டமான தமிழின விரோதப் போக்குமாகும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். இயல்பாக எழும் மாற்றுக் குரலை சகித்துக் கொள்ளும் தன்மையை மத்திய அரசு இழந்துவிட்டது. டெல்லி ஜாமியா, - உத்தரப்பிரதேச அலிகார் பல்கலைக்கழகங்களில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது.
‘வேற்றுமையில் ஒற்றுமை' என்ற இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டமும், அதைத் தொடர்ந்து வரவுள்ள குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையும், இந்திய அரச மைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், இச்சட்டத்துக்கு ஆதரவளித்த அதிமுகவை கண்டித்தும் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் 'குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி' நடத்தப்படும்.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
கமல்ஹாசனுக்கு அழைப்பு
கூட்டத்துக்கு பிறகு செய்தி யாளர்களிடம் ஸ்டாலின் கூறிய தாவது:
மாநிலங்களவையில் அதிமுக,பாமக உறுப்பினர்கள் வாக்களித்ததால்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஒரு இந்தியரும் பாதிக்கப்பட மாட்டார் என்று கூறியதில் ஆச்சரியம் இல்லை.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் என்னுடன் தொலைபேசியில் பேசினார். தற்போது கூட்டணி கட்சிகளுடன் மட்டும் பேசியுள்ளோம். தேவைப் படும்போது மற்ற கட்சிகளையும் அழைப்போம். 23-ம் தேதி நடக்கும் பேரணியில் யார் வேண்டு மானாலும் பங்கேற்கலாம்.
இந்தச் சட்டத்தை பாஜக அரசுதிரும்பப் பெறும் என்று நம்புகிறோம். இல்லையெனில் மீண்டும் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT