Published : 19 Dec 2019 08:53 AM
Last Updated : 19 Dec 2019 08:53 AM
இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான பிரீமியத்துக்கு வசூலிக்கப்படும் 18 சதவீத வரியை ரத்து செய்து முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 38-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றார்.
இக் கூட்டம் தொடர்பாக அவர்நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜிஎஸ்டி கவுன்சிலில் இருந்து தமிழகத்துக்கு ரூ.1,898 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.1,338 கோடி அதாவது 2 மாதத்துக்கான இழப்புத் தொகை பெற வேண்டியுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி)யை பொறுத்தவரை ஜிஎஸ்டி அமல்படுத்திய 2017-18-ம் ஆண்டில் இருந்து நிலுவைத் தொகையாக ரூ.4 ஆயிரத்து 73 கோடி உள்ளது. இந்த நிலுவைத் தொகையை விரைவாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வீட்டுமனைத் துறை இந்திய பொருளாதாரத்துக்கு பெரிதும் பங்களிப்பதுடன், வேலை வாய்ப்பை பெருக்கவும் உதவும் முக்கிய துறையாகும். இந்த துறையை ஊக்குவிப்பது குறித்து அமைச்சர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
கடந்த செப்.20-ம் தேதி கோவாவில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில், வரிவிலக்கு மற்றும் வரி குறைப்பு குறித்து தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.
கைத்தறி பொருட்கள், வணிகச்சின்னம் இடப்பட்ட அரிசி, உணவுதானியங்கள், ஜவ்வரிசி, ஊறுகாய், வெண்ணெய், நெய், மீன்பிடித் தொழிலுக்கான உபகரணங்கள், மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச், வணிகசின்னமிடப்படாத நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள், தீப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும் என்றும்,
மத்திய கூட்டுறவு வங்கிகள், சிட் நிதி தொடர்பான சேவைகள், நெல் குற்றுகை சேவைகள்,நுண்ணீர் பாசன கருவிகள், பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பாமாயில், மண்ணெண் ணெய் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், ஆயுள் இன்சூரன்ஸ் பிரீமியம் மீது விதிக்கப்படும் வரி,சாதாரண மக்களுக்கான இன்சூரன்ஸ் பரவல், சமூக பாதுகாப்பை பாதிக்கும்படி உள்ளதால், ஆயுள் இன்சூரன்ஸ் பிரீமியம் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 18 சதவீத வரியில் இருந்து முழு விலக்களிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள வணிகர்கள் பயன்பெறும் வகையில் தற்போது இயங்கிவரும் உதவி மையங்கள், தமிழ் மற்றும் பிராந்திய மொழிகளிலும் இயங்க போதிய வசதிகள் செய்தித்தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT