Published : 19 Dec 2019 08:39 AM
Last Updated : 19 Dec 2019 08:39 AM

மாநகராட்சியின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் புதிதாக 43,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

சென்னை

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களின் நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் த.ந.ஹரிஹரன் ஆகியோர் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அதனடிப்படையில், திருவொற்றியூர் மண்டலம், 9-வது வார்டு, ஈசானிமூர்த்தி கோயில் தெருவில் பயன்பாடற்று இருந்த சமுதாய கிணறு தூர்வாரி புனரமைக்கப்பட்டு, அருகாமையில் உள்ள பகுதிகளில் இருந்து மழைநீர் சேகரிப்பு இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதை துணை ஆணையாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

அண்ணா நகர் மண்டலம், 94-வது வார்டில், சிட்கோ நகர் 42-வது தெருவில் பயன்பாடற்று இருந்த சமுதாய கிணறு, தூர்வாரி புனரமைக்கப்பட்டு, அருகாமையில் உள்ள பகுதிகளில் இருந்து மழைநீர் சேகரிப்பு இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை துணை ஆணையாளர் (சுகாதாரம்) ப.மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

கடந்த டிசம்பர் 7-ம் தேதி வரை சென்னையில் 3 லட்சத்து 19,788 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 2 லட்சத்து 47,499 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. 22,429 கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 43,223 கட்டிடங்களில் புதிதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x