Published : 18 Dec 2019 08:32 PM
Last Updated : 18 Dec 2019 08:32 PM
முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் வீடுகளில் குண்டு வெடிக்கும். தலைமைச் செயலகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என போனில் மிரட்டல் வந்ததை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் அதிமுகவின் 11 மற்றும் பாமகவின் 1 உறுப்பினர் எண்ணிக்கை மசோதா நிறைவேற உதவியது. இதனால் அதிமுக கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் சென்னை எழும்பூர் காவல் கட்டுப்பாட்டறைக்கு செல்போன் எண்ணிலிருந்து ஒரு நபர் அழைத்தார். தன்னைப் பற்றிச் சொல்லாமல் கடகடவென்று பேச ஆரம்பித்த அந்த நபர், ''குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து அதிமுக அரசு துரோகம் செய்துவிட்டது. அதனால் தலைமைச் செயலகத்தை மனித வெடிகுண்டால் தகர்க்கப் போகிறோம். அடுத்து முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் குண்டு வெடிக்கும்'' எனப் பேசிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக முதல்வர், துணை முதல்வர் இல்லங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று தலைமைச் செயலகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மர்ம நபர் எச்சரித்ததால், அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். போலீஸார் நடத்திய விசாரணையில் போன் செய்த நபர் கோவையிலிருந்து பேசியது தெரியவந்துள்ளது.
அவரது செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்து கண்டுபிடிக்க கோவையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT