Published : 18 Dec 2019 02:21 PM
Last Updated : 18 Dec 2019 02:21 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்படும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மையினரின் உரிமைகளையும் காத்திட உறுதியேற்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்ப்பலைகள் பரவியுள்ள நிலையில், இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.18) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரும் டிச.23-ம் தேதி சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில், "சமூக நீதியையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கத்தின் உயரிய நோக்கங்களில் ஒன்று சிறுபான்மையினர் உரிமைகளையும், நலன்களையும் காப்பதாகும்.
மத - இன - மொழி - பாலினம் என, எந்த வகையிலான சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்தம் உரிமைகளுக்கு எத்திசையிலிருந்து ஆபத்து என்றாலும், அதிலிருந்து அவர்களைக் காத்திடுதல் நம் கடமையாகும்.
இன்று (டிச.18), சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகளுக்கான நாள் கடைப்பிடிக்கப்படும் நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்படும் சிறுபான்மை முஸ்லிம் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மையினரின் உரிமைகளையும் காத்திட உறுதியேற்போம்!" எனப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT