Published : 18 Dec 2019 02:17 PM
Last Updated : 18 Dec 2019 02:17 PM
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ள அதிமுகவும் பாமகவும் தமிழினத் துரோகிகள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடெங்கும் எதிர்ப்பலைகள் பரவியுள்ள நிலையில், இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.18) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 11 கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், வரும் டிச.23-ம் தேதி சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி நடத்திட முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "இந்தச் சட்டத் திருத்தத்தில், அண்டை நாடுகள் பட்டியலில் இலங்கை விடுபட்டிருப்பது ஏன்?அகதிகளாக வருபவர்களில் முஸ்லிம்களைத் தவிர்த்திருப்பது ஏன்?
மாநிலங்களவையில் அதிமுகவின் 11 உறுப்பினர்கள், பாமகவின் 1 உறுப்பினர் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழினத் துரோகிகளாக அவர்கள் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றனர். நிச்சயமாக அவர்களைத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பது உறுதி" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.
இச்சட்டத்தால் இந்தியர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறாரே?
முதல்வர் பழனிசாமி, மோடியும் அமித் ஷாவும் என்ன சொன்னாலும் அதற்கு அடிபணிந்து ஏற்றுக்கொள்ளக்கூடியவர். எனவே அவர் சொல்வதில் ஆச்சரியமில்லை.
திமுகவை எதிர்த்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாரே?
அதில் நான் தலையிட விரும்பவில்லை. பாஜக ஆட்சியில் செய்திருக்கும் சாதனைகளை மக்களிடத்தில் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். எதுவும் செய்யாமல் போராட்டம் அறிவித்திருக்கின்றனர். இது வீண் விதண்டாவாதம். அதற்கு நாங்கள் கவலைப்படவில்லை.
இச்சட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறாரே? இந்தப் போராட்டம் தாக்கத்தை ஏற்படுத்துமா?
நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் விரைவில் அறிவிப்போம். இச்சட்டத்துக்கு நாடு முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்புக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நீங்கள் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்று உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?
அவருக்கெல்லாம் நாங்கள் வேதம் ஓத வேண்டும் என்ற அவசியமில்லை.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தரவில்லை என முதல்வர் பழனிசாமி திமுகவை விமர்சித்துள்ளாரே?
அதைப்பற்றி பேசி விதண்டாவாதம் செய்ய நான் தயாராக இல்லை. இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு முடிவு வர வேண்டும்.
திமுக அழைப்பு விடுத்தால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தாரே?
கமல்ஹாசன் என்னிடமும் தொலைபேசியிலும் பேசினார். நான் அவரிடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். ஏற்கெனவே திமுக கூட்டணியில் உள்ள 11 கட்சிகளைத்தான் அழைத்திருக்கிறோம். கட்சி சார்பற்ற முறையில் கூட்டம் நடத்தினால் நிச்சயம் அவர் அழைக்கப்படுவார். பேரணியில் கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்
ரஜினி இச்சட்டம் குறித்து இதுவரை கருத்து சொல்லவில்லையே?
அவரிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT