Published : 18 Dec 2019 07:42 AM
Last Updated : 18 Dec 2019 07:42 AM
சத்தீஸ்கர் மாநிலத்தைப் பின்பற்றி குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கக் கோரி சென்னையில் கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைப் பின்பற்றி குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்க தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில் டிச.17-ல் கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று கூடிய விவசாயிகள் சாலையில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:
எங்களுக்கு மானியம் எதுவும் வேண்டாம். நாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்குங்கள். ஒரு மூட்டை நெல்லை விளைவித்து அதை சந்தைக்கு கொண்டு வர வேண்டுமானால் அதற்கு ரூ.800-க்கு குறைவில்லாமல் செலவாகிறது. ஆனால் எங்களுக்கு கடந்த ஆண்டு வரை ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.900 கூட தரவில்லை. எனவே, சத்தீஸ்கர் மாநிலத்தைப் போல இந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்று கோரி போராடுகிறோம்.
நெல் கொள்முதலை மத்திய அரசு கொள்கைரீதியாக நாடு முழுவதும் கைவிட்டுள்ளது. அதனால், நேரடி நெல் கொள்முதல் செய்யக்கூடாது என்று தமிழக அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது.
குருவை நெல் கொள்முதலுக்கு அக்.1-ம் தேதி வெளியிட வேண்டிய அரசாணை, இதுவரை வெளியிடப்படவில்லை. இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். பின்னர், விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிப்பதாகக் கூறி, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உரக்க கோஷமிட்ட விவசாயிகள், கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். அதனால், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT