Published : 18 Dec 2019 07:36 AM
Last Updated : 18 Dec 2019 07:36 AM

மனித உரிமைகள் தினம் கொண்டாட்டம்: என்கவுன்ட்டர்களை பொதுமக்கள் நியாயப்படுத்துவது ஏன்?- ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் விளக்கம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மனித உரிமைகள் தின விழாவில் (இடமிருந்து) ஆணையத்தின் செயலர் வே.ஷோபனா, உறுப்பினர் டி.ஜெயசந்திரன், தமிழ்நாடு ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவர் நீதிபதி பி.கலையரசன், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா, மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஏ.சி.மோகன்தாஸ், காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் குமரன். படம்: பு.க.பிரவீன்.

சென்னை

என்கவுன்ட்டர் சம்பவங்களை பொதுமக்கள் நியாயப்படுத்துவது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் டி.ஜெயசந்திரன் விளக்கம் அளித்தார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பில் தேசிய மனித உரிமைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், டி.ஜெயசந்திரன் பேசியதாவது:

கடந்த 1993-ம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் மனித உரிமைகள் ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மனித உரிமைகள் மீறலுக்கு எதிராக மட்டுமின்றி அதை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள் மீதும்நடவடிக்கை எடுக்க ஆணையத்தால் பரிந்துரை செய்ய முடியும்.

தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 1 லட்சத்து 92 ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 1 லட்சத்து 76 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. புகாருக்கு ஆளான 530 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு அவர்களில் 236 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரம் அளவுக்கு இழப்பீடு வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

காவல் துறைக்கு எதிரானதல்ல

மனித உரிமைகள் ஆணையத்தின் மீது நம்பிக்கை கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்க முன்வருகிறார்கள். புகார்களை நன்கு விசாரித்து பின்னரே நடவடிக்கை எடுக்கிறோம். மனித உரிமைகள் ஆணையம் காவல் துறைக்கு எதிரானது அல்ல. பொய் புகார்கள் சொன்னால் அபராதம் விதிக்கிறோம்.

குற்ற வழக்குகளில் நீதித்துறைமூலம் நடவடிக்கை எடுப்பதில்காலதாமதம் ஆவதால்தான் என்கவுன்ட்டர் சம்பவங்களை பொது மக்கள் நியாயப்படுத்துகிறார்கள். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லேயே என்ற ஆதங்கம்தான் இத்தகைய மன நிலைக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆணையத்தின் மற்றொரு உறுப்பினரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஏ.சி.மோகன்தாஸ் பேசும்போது, "மனித உரிமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார். தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.பி.நிர்மலா பேசும்போது, ‘‘குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பெண்களை போகப்பொருளாக பார்க்கும் மனோபாவம் மாற வேண்டும்’’ என்றார்.

தமிழகம் முன்னணி

தமிழ்நாடு மாநில ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவர் நீதிபதி பி.கலையரசன் பேசும்போது, ‘‘இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்பில் தமிழகம் முன்னணி யில் திகழ்கிறது. உள்நாட்டு மொழிகளை காப்பதன் மூலம் மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்’’ என்றார்.

ஆணையத்தின் செயலர் வே.ஷோபனா, பதிவாளர் (சட்டம்) என்.வாசுதேவன், காவல்துறை, அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x