Published : 17 Dec 2019 08:05 PM
Last Updated : 17 Dec 2019 08:05 PM
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் கடல் பகுதியில் 35 வயதுடைய ஆண் கடற்பசு இறந்து கரை ஒதுங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அருகே ஆனந்தபுரம் கடற்கரையில் இன்று(செவ்வாய்க்கிழமை) அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனக்காப்பாளர் அசோக்குமார், ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மீனவர்கள் உதவியுடன் கரைக்கு மீட்டுக் கொண்டு வந்து, வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வாலாந்தரவை கால்நடை மருத்துவர் நிஜாமுதீன் உடற்கூறு ஆய்வு செய்தார்.
மேலும் இறந்த கடற்பசுவை புதிதாக பயிற்சி பெறும் 13 வனச்சரகர்கள், இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் பார்வையிட்டனர்.
இறந்தது 35 வயதுடைய ஆண் கடற்பசு என்றும், சுமார் 3 மீட்டர் நீளம், 2 மீட்டர் சுற்றவும், 530 கிலோ எடை கொண்டதாகும். இறந்த கடற்பசுவின் உடல்களில் காயங்கள் இருந்தன. இவை பெரிய விசைப்படகுள் அல்லது கப்பல்கள் மோதி காயம்பட்டு இறந்திருக்கலாம்.
மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அரிய வகையான இந்த கடற்பசு 150 எண்ணிக்கையில் தான் வாழ்கின்றன என கணக்கிடப்பட்டுள்ளது.
கடற்பசுவின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள் எனவும், அவை 12 முதல் 14 மாதங்களுக்கு கருவுற்று குட்டி ஈணும். அரிய பாலூட்டி வகையான இவற்றை மீனவர்கள், பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT