Published : 17 Dec 2019 02:22 PM
Last Updated : 17 Dec 2019 02:22 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு அன்புமணி ஆதரவாக ஓட்டுப் போட்டதற்கு கூட்டணி தர்மம் என ராமதாஸ் கூறியது நல்ல நகைச்சுவை என, மக்களவை திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (டிச.17) சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் பேசியதாவது:
"குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசியபோது, சிறுபான்மையினர் நம் தோழர்கள் என்று பேசினேன். பேசிவிட்டு வெளியே வந்த பிறகு காவி உடையணிந்த பாஜக எம்.பி. ஒருவர் ஏன் முஸ்லிம்களை ஆதரிக்கிறீர்கள் என என்னிடம் கேட்டார். 'முஸ்லிம்கள் உங்களுக்கு மாமனா? மச்சானா?' எனக் கேட்டார். ஆமாம், முஸ்லிம்கள் எங்களுக்கு மாமன், மச்சான்தான்.
முஸ்லிம்களாக பிறந்தது அவர்கள் குற்றமா? கிறிஸ்தவர்களாக பிறந்தது அவர்கள் குற்றமா? நேபாளம், இலங்கையை ஏன் விட்டுவிட்டீர்கள் என நாடாளுமன்றத்தில் கேட்டேன். அதற்கு அந்தந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்குத்தான் இச்சட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா கூறினார். நேபாளத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர்தான். இலங்கையில் இந்துக்கள், முஸ்லிம்கள் சிறுபான்மையினர்தான். 30 ஆண்டுகளாக அகதிகள் முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை என்ன? அதற்கு அமித் ஷா பதில் சொல்லவில்லை.
அவர்களுக்கு இந்தி பேசும் இந்துக்கள் வேண்டும். ஆனால், தமிழ் பேசும் இந்துக்கள் வேண்டாம். இந்தியா என்ன இந்தி நாடா? முஸ்லிம்கள் விரோதி என்கிறார் அமித் ஷா. தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கிறிஸ்தவர்களைச் சேர்க்கவில்லை. ஆனால், இப்போது கொண்டு வந்திருக்கும் சட்டத்தில் சிறிஸ்தவர்களைச் சேர்த்திருக்கின்றனர். கிறிஸ்தவர்களைச் சேர்க்கவில்லையென்றால், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை இந்தியாவை விமர்சிக்கும். மோடி ஊர், ஊராக 'டூர்' செல்ல முடியாது. அவரை உள்ளே சேர்க்க மாட்டார்கள்.
சிறுபான்மையினரைப் பிரிக்க வேண்டும், முதலில் முஸ்லிம்களை ஒழித்து பிறகு கிறிஸ்தவர்களை ஒழிப்பதே பாஜகவின் எண்ணம். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதியா? பாஜகவில் எத்தனையோ இந்து தீவிரவாதிகள் உள்ளனர்.
அன்புமணி ஆதரவாக ஓட்டுப் போட்டதற்கு கூட்டணி தர்மம் என ராமதாஸ் கூறியது நல்ல நகைச்சுவை. இந்தியாவில் ஒரேயொரு விவசாயி நல்ல மகசூல் செய்து ரூ.500 கோடி லாபம் பார்த்தார். அந்த விவசாயிதான் ராமதாஸ். தமிழ்நாட்டின் மானத்தை அதிமுகவினர் வாங்குகின்றனர்".
இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT