Published : 17 Dec 2019 11:15 AM
Last Updated : 17 Dec 2019 11:15 AM

வாக்குப்பதிவில் ஆள் மாறாட்டத்தை தடுப்பது எப்படி?- உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு வழிகாட்டும் மாநில தேர்தல் ஆணையம்

மதுரை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் ஆள்மாறாட்டத்தை தடுக்க, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், அறிவுறைகளையும் மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

ஊரக உள்ளாட்சித்தேர்தல் தமிழகத்தில் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில், வாக்குச்சாவடிகளையும், அதில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களையும் தயார் செய்யும் பணியில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் ஆள்மாறாட்டத்தை தடுக்க, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், அறிவுறைகளையும் மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது..

ஒரு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலருடன் சேர்த்து 7 வாக்குப்பதிவு அலவலர்கள் கொண்ட குழு பணிபுரியும். இரு வாக்குச்சாவடிகளாக இருந்தால் வாக்குச்சாவடி தலைமை அலுவலருடன் சேர்த்து 8 வாக்குப்பதிவு அலுவலர்களைக் கொண்ட குழு பணிபுரியும். இரு வாக்குச்சாவடிகளில் மட்டும் முதலாம் வகுப்புப்பதிவு அலுவலராக இருவர் நியமிக்கப்படுவர்.

உள்ளாட்சித்தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெறுவது, தோல்வியடைவது அதிகளவு நடக்கும். அதனால், ஒவ்வொரு வாக்குகளும் கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க முக்கியமானதாக கருதப்படுவதால் வாக்குப்பதிவில் ஆள்மாறாட்டம் நடக்க வாய்ப்புள்ளது.

இதை தடுக்க ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகள் குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சிறப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அதில் மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளதாவது:

ஒரு வாக்காளர் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததும் அவரை அடையாளம் காணும் நடவடிக்கைகளை முதலாம் வாக்குப்பதிவு அலுவலர் மேற்கொள்ள வேண்டும். வாக்காளர்கள் சுய விவரங்கள் அடங்கிய வாக்குச்சாவடி சீட்டினை (Booth slip) கொண்டு வரலாம்.

அதில் வாக்காளரின் வார்டு எண், பாகம் எண், வாக்காளர் பட்டியலில் அவரது வரிசை எண் மற்றும் வாக்காளரின் பெயர் போன்ற விவரங்கள் இருக்கும். இந்த சீட்டு வாக்காளரை எளிதில் அடையாளம் காணும் பொருட்டு அளிக்கப்படும் ஒரு ஆவணம் மட்டுமே. அதற்காக எந்த ஒரு வாக்காளரையும் அவ்வாறு ஒரு வாக்குச்சாவடி சீட்டினை பெற்று வருமாறு கோரக்கூடாது. அத்தகைய சீட்டு இல்லையெனத் திருப்பி அனுப்பவும் கூடாது.

வாக்குப்பதிவின் போது ஆள் மாறாட்டத்தை தவிர்த்திட வாக்காளர்களிடம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் ஆணவங்களில் ஏதேனும் ஒன்றினை பெற்று சரிபார்த்து வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். மூல ஆவணங்களை(orginal) மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். நகல்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

வாக்காளரின் சீட்டைக் கொண்டு அல்லது அவரால் தெரிவிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் பரிசீலித்து வாக்காளர் பட்டியலின்படி அவரது வரிசை எண் மற்றும் பெயர் போன்ற விவரங்களை உரக்கப் படிக்க வேண்டும். இது தேர்தல் முகவர்களும், வாக்குப்பதிவு அலுவலர்களுடன் வாக்காளரை அடையாளம் காணவும், அவரது பெயரை தங்களிடமுள்ள வாக்காளர் பட்டியலில் குறித்துக் கொள்ளவும் உதவும்.

ஒரு வாக்காளரின் அடையாளத்தை பற்றி ஆட்சேபனை ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை எனில் முதலாம் வாக்குப்பதிவு அலுவலர் தன்வசம் உள்ள வாக்காளர் பட்டியலின் குறியீட்டு நகலில் அந்த வாக்காளரின் பெயருக்கு அடியில் அவர் வாக்களிப்பதற்கு அடையாளமாக பேனாவினால் அடிக்கோடிட வேண்டும்.

வாக்காளரது அடையாளத்தை பற்றி ஆட்சேபனை எழும்போது மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை காண்பிக்க கோரி அவர் உண்மையான வாக்காளர் என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அவருக்கு வாக்குசீட்டுகக்காளை வழங்கி வாக்குப்பதிவு செய்ய அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரே வாக்குச்சாவடியில் ஆண், பெண் வாக்காளர் இரு பாலினரும் வாக்குப்பதிவு செய்வதாக இருந்தால் வாக்குப்பதிவு அலுவலர் அந்த வாக்காளருடைய பெயரின் அடியில் அடிக்கோடு இடுவதுடன் அவர் பெண் வாக்காளர் என்பதை குறிக்கும் வகையில் அவரது பெயரின் இடது பக்கத்தில் ஒரு டிக் குறியிட வேண்டும். இது ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்யும் ஆண், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையை எளதில் தனித்தனியாக அறிய உதவும். பெண்களுக்கென மட்டும் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் இவ்வாறு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x