Published : 17 Dec 2019 08:31 AM
Last Updated : 17 Dec 2019 08:31 AM

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்: திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், கே.எம்.காதர் மொகிதீன், கலி.பூங்குன்றன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

சென்னை

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “குடியுரிமை திருத்த சட்டம், மத அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் நோக்கத்துக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. மதச்சார்பின்மைக்கு எதிரான இச்சட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

திமுக அமைப்புச் செயலாளர்ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, “பொருளாதாரச் சீரழிவு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றை திசை திருப்புவதற்காகவே இந்தச் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி மாநில ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா பேசும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மக்களை மதரீதியில் பிளவுபடுத்த இந்திய மக்கள்ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசும்போது, “ஆர்எஸ்எஸ், சங்பரிவார், அதிமுக ஆகியோரது நோக்கங்களை மக்களிடத்தில் அம்பலப்படுத்தி நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்’’ என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, “இந்தியாஒரு நாடாக இருக்க வேண்டுமானால் இந்த குடியுரிமை திருத்த சட்டம் தடுக்கப்பட்டாக வேண்டும். இந்த மசோதாவை வங்கக் கடலில் தூக்கியெறியும் காலம் கனியும்” என்று தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது, “இச்சட்டம் நிறைவேற உறுதுணையாக இருந்த அதிமுக, பாமகவை மன்னிக்கவே முடியாது. அதனால்தான் நாளை (டிச.18) முதல்வர் பழனிசாமி இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளோம்" என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசும்போது, “இந்தியாவை இந்துக்கள் தேசமாக அறிவிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கம்தான் மத்திய அரசுக்கு உள்ளது. அதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என முயற்சிக்கின்றனர்’’ என்று குற்றம் சுமத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை, சமூக செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ், ஊடகவியலாளர் ஜென்ராம், ப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர் விஜயசங்கர் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x