Published : 16 Dec 2019 10:36 AM
Last Updated : 16 Dec 2019 10:36 AM
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (டிச.16) நிறைவுபெறும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5,486 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டுகள் 17, ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 174, கிராம ஊராட்சி தலைவர் 403, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2,943 என, மொத்தம் 3,537 பதவிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்புமனுத் தாக்கல் நடைபெறவில்லை. மாவட்டத்தில் இதுவரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,457 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,419 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 560 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 50 பேர் என, மொத்தம் 5,486 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று (டிச.16) கடைசி நாள். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்றைய தினம் அதிகமானோர் வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (டிச.17) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 19-ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
தொடர்ந்து டிசம்பர் 27-ம் தேதி தூத்துக்குடி, கருங்குளம், வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதல் கட்டமாகவும், டிசம்பர் 30-ம் தேதி கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 2-ம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment