Published : 16 Dec 2019 09:57 AM
Last Updated : 16 Dec 2019 09:57 AM

அனைத்து பாதைகளிலும் பாஸ்டேக் முறை கூடாது; சுங்கச்சாவடிகளில் ரொக்க பணம் செலுத்த தனிப்பாதை எப்போதும் வேண்டும்: மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

சேலம்

சுங்கச்சாவடிகளில் அனைத்து பாதைகளிலும் பாஸ்டேக்கை கட்டாயப்படுத்துவதால் பல்வேறு பிரச்சினைகள் எழுவதாகவும், பணம் செலுத்தி செல்பவர்களுக்கு வசதியாக சுங்கச்சாவடியில் எப்போதும் தனிப்பாதை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன மாநில பொருளாளர் தனராஜ் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படுவதை வரவேற்கிறோம். ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்துக்கு செல்லும்போது, அதிக தொகையை கையில் வைத்திருப்பது பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும். மேலும், சுங்கச்சாவடிகளை தாமதமின்றி கடந்து செல்லவும் பாஸ்டேக் உதவுகிறது.

ஆனால், லாரி உரிமையாளர்களில் பலர் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் பாஸ்டேக் கட்டணத்தை, இணையதளம் வாயிலாக செலுத்தும் அளவுக்கு போதுமான விவரம் அறியாதவர்கள். மேலும், கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும். அத்துடன் லாரியில் சரக்கு ஏற்றி, குறிப்பிட்ட இடத்தில் அதை இறக்கிய பின்னரே வாடகை கிடைக்கும். அதுபோன்ற நேரங்களில், வாடகைப் பணம் கிடைப்பதை பயன்படுத்தியே டீசல் செலவு, சுங்கக் கட்டண செலவுகளை செய்ய வேண்டிய கட்டாயத்திலும் பலர் இருக்கின்றனர்.

இந்நிலையில், சுங்கக் கட்டணத்துக்காக ஒட்டுமொத்தமாக முன்கூட்டியே ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலுத்திவிட்டு செல்வது லாரி உரிமையாளர்கள் பலரால் இயலாத செயலாக இருக்கும். குறிப்பாக, சேலத்தில் இருந்து கொல்கத்தா வரை சென்று வர சுங்கக் கட்டணம் ரூ.22,540 ஆகிறது. இவ்வளவு தொகையை முன்கூட்டியே செலுத்துவது, பெரும்பாலான லாரி உரிமையாளர்களுக்கு இயலாத காரியமாக இருக்கும்.

மேலும், பாஸ்டேக் கணக்கில் நாம் பணம் செலுத்தும்போது, சில நேரங்களில் பாஸ்டேக் கணக்கில் பணம் சென்று சேராது. ஆனால், நமது வங்கிக் கணக்கில் இருந்து பணம் குறைந்துவிடும். ஒரு வாரத்துக்கு பின்னரே, மீண்டும் நமது வங்கிக் கணக்கு பணம் வந்து சேரும். அதுபோன்ற நேரங்களில், 2-வது முறையாக பாஸ்டேக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு நம்மிடம் கூடுதலாக பணம் இருக்க வேண்டும்.

பாஸ்டேக்கில் பணம் செலுத்தி செல்லும்போதுகூட, சில நேரங்களில் சுங்கச்சாவடியில் உள்ள பாஸ்டேக் வழித்தடம் சர்வர் பிரச்சினை காரணமாக செயல்படாமல் போகிறது. அதுபோன்ற நேரங்களில், தாமதமும் தேவையற்ற பிரச்சினைகளும் ஏற்படும்.

எனவே, சுங்கச் சாவடிகளில் உள்ள அனைத்து வழித்தடங்களையும் பாஸ்டேக் முறையின் கீழ் கொண்டு வரக்கூடாது. பணம் செலுத்தி செல்பவர்களுக்கு வசதியாக, தனிப்பாதை எப்போதும் இருக்க வேண்டும். மேலும், பாஸ்டேக் கணக்கில் எந்நேரமும் பணம் செலுத்த வசதியாக, சுங்கச் சாவடிகளில் 24 மணி நேர பணம் செலுத்தும் வசதி கொண்ட பாஸ்டேக் கவுன்ட்டர்களை அமைக்க வேண்டும். இதுகுறித்து அரசுக்கு கோரிக்கையாக தெரியப்படுத்தி இருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x