Published : 14 Dec 2019 11:09 AM
Last Updated : 14 Dec 2019 11:09 AM
உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ‘கை’காட்டும் நபர்களுக்கே கவுன்சிலர் ‘சீட்’ வழங்குவதற்கு அதிமுக கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதால் நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தனியாகவும், ஊரகப்பகுதிளுக்கு தனியாகவும் நடத்தப்படுகிறது. தற்போது ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது.
வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டநிலையில் அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. திமுகவில் தற்போது ஒரு சில உள்ளாட்சி இடங்களுக்கு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டனர். ஊரகப்பகுதியில் பெரியளவில் அதிமுக, திமுகவில் வேட்பாளர் அறிவிப்பில் சர்ச்சையும், எதிர்ப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில் சில நிர்வாகிகள் போட்டியிட்டாலும் அவர்களை சரிகட்டி விடுவார்கள். ஆனால், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுகவில் வேட்பாளர் பட்டியல் வெளியினால் பெரிய கோஷ்டி பூசலும், எதிர்ப்பும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் இந்த முறை அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள், ‘கை’ காட்டும் நபர்களுக்கே மட்டுமே ‘சீட்’ கொடுப்பதற்கு அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுவதால் நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:
ஜெயலலிதா இருந்தவரை உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு கவுன்சிலர் ‘சீட்’ வழங்கப்பட்டாலும் அந்த பட்டியலை கட்சி மேலிடம் ஆய்வு செய்யும். திருத்தம் செய்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதற்கு பயந்தே ஒரளவு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஒரளவு தகுதியான, வெற்றிவாய்ப்புள்ள நிர்வாகிகளை வேட்பாளர் பட்டியலில் தவிர்க்க மாட்டார்கள்.
முழுக்க, முழுக்க தங்கள் ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், உள்ளாட்சித் தலைவர் பதவிக்கு முடிந்தவரை மாவட்டத்தில் தங்களை எதிர்த்து அரசியல் செய்கிறவர்களை கொண்டு வர மாட்டார்கள். அவர்களுகு்கு ‘சீட்’ கொடுத்து தோற்கடிக்கப்பார்ப்பார்கள்.
ஆனால், அதையும் மீறி கட்சி மேலிடம் சில சமயங்களில் சாதாரண நிர்வாகிகளை கூட மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு முன் நிறுத்தி வெற்றிப்பெற வைக்கும். ஆனால், தற்போது கட்சி மேலிடம் முழுக்க முழுக்க மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு மட்டுமே மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் ‘கவுன்சிலர்’ ‘சீட்’ வழங்க முடிவு செய்துள்ளது.
இது கட்சிக்கு ஆபத்தான முடிவு. கட்சியில் மாவட்ட செயலாளர்களையும், அமைச்சர்களையும் எதிர்த்து நிர்வாகிகள் சில இடங்களில் செயல்படுவார்கள். சில இடங்களில் சில நிர்வாகிகளை அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு பிடிக்கவே செய்யாது. அப்படியிருக்கும்போது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பரிந்துரைக்கும் வேட்பாளர் பட்டியல் எப்படி சரியாக இருக்கும். இந்த முறை அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பரிந்துரைக்கு நபர்களுக்கு மட்டும் ‘சீட்’ வழங்கினால் அதிமுகவில் போட்டி வேட்பாளர்கள் அதிகளவு களம் இறங்குவார்கள்.
அவர்களால் திமுகவக்கும், மற்ற கட்சிகளுக்கும் சாதகமாகும். தற்போது அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர்களையும், அதில் வெற்றிபெற்றால் மேயர், நகராட்சித் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கும் நபர்கள் பட்டியலையும் தயார் செய்துவிட்டார்கள்.
அதில், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் முழுக்க முழுக்க தங்கள் ஆதரவாளர்களுக்கும், உறவினர்களுக்கு மட்டுமே ‘சீட்’ வழங்கியுள்ளனர். அந்த பட்டியலில் கட்சியில் சாதாரண நிர்வாகிகள், தொண்டர்கள் இடம்பெறவில்லை. அதற்கு, கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட பொருளாதார பின்னணியும், சொந்த செல்வாக்கும், கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கூறுகின்றனர்.
இதுவரை கட்சி ஆளும்கட்சியாக இருந்தும், சாதாரண நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் பொருளாதார அளவில் முன்னேற்றம் பெறவில்லை. டெண்டர்கள் அனைத்தையும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்கிவிட்டனர். கட்சிக்காக உழைத்த சாதாரண அடிமட்ட வார்டு கிளை நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்களுக்கு டெண்டர் வழங்கவில்லை.
கட்சியில் அவர்களை சம்பாதிக்கவும் விடவில்லை. மதுரையில் எதிர்கட்சி மாவட்ட செயலாளர்களுக்கும், எம்எல்ஏ-க்களுக்கு கூட அமைச்சர்கள் டெண்டர்கள் கொடுக்கின்றனர். சொந்த கட்சிக்கார்களுக்கு கொடுப்பதில்லை. அதனால், அதிமுகவை பொறுத்தவரையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப்பகுதிகளில் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு இந்த முறை சீட்டும் கொடுக்காதப்பட்சத்தில் அவர்கள் அதிகளவு போட்டி வேட்பாளர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே அமமுக கட்சியினர் அந்தந்த வார்டுகளில் தாங்கள் வெற்றிப்பெறுகிறமோ இல்லையோ, அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு உள்ளாட்சித்தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் தங்கள் உறவினர்களையும், ஆதரவாளர்களையும் மட்டுமே உள்ளாட்சிப்பதவிகளுக்கு கொண்டு வர நினைத்தால் அதிமுகவில் பெரிய அதிருப்தி ஏற்படும். அது கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை உண்டு பன்னும், ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment