Published : 13 Dec 2019 05:17 PM
Last Updated : 13 Dec 2019 05:17 PM

பின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20,000-க்கு விற்கப்பட்ட சிறுமிகள்: மீட்கும் பணியில் போலீஸார்

சிறுமிகளின் பாட்டி வீடு

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில், பின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20,000-க்கு விற்கப்பட்ட சிறுமிகளை மீட்க போலீஸார் கோயம்புத்தூருக்கு விரைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் கீற்று முடைந்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு சங்கீதா (14), கவிதா (13), சுகன்யா (8) என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

காளியப்பனுக்கு குடிப்பழக்கம் அதிகமாகி நோய்வாய்ப்பட்டார். கை, கால் பாதிப்படைந்து படுத்த படுக்கையாகி விட்டார். இதனால் கடந்த சில மாதங்களாக காளியப்பனின் மூன்று மகள்களும் அவரது பாட்டி விஜயலட்சுமியின் (80) பராமரிப்பில் வளர்ந்தனர். இந்த மூன்று சிறுமிகளையும் வளர்க்க விஜயலட்சுமி சிரமப்பட்டு வந்த நிலையை அறிந்து நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த கனகம், சகுந்தலா ஆகிய இருவர் உதவி செய்வதாகக் கூறினர். அவர்கள் கோயம்புத்தூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சங்கீதா, கவிதா ஆகிய இருவரையும் அழைத்துச் சென்றனர். இதற்காக பாட்டி விஜயலட்சுமிக்கு ரூ.20,000 கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே குடவாசல் கிராம நிர்வாக அலுவலருக்கு சிறுமிகள் விற்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, குடவாசல் போலீஸாருக்கும் குழந்தைகள் நல குழுமத்தினருக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து பாட்டி விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.

கோயம்புத்தூருக்கு பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்கு அனுப்பியுள்ளதாக ஏஜெண்டுகள் தெரிவித்தனர் என்று பாட்டி விஜயலட்சுமி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏஜெண்டுகளை செல்போனில் ஒரு முறை தொடர்பு கொண்ட போலீஸாரால் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஏஜெண்டுகள் தலைமறைவாகி விட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே கோயம்புத்தூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்துக்குச் சென்று 2 சிறுமிகளையும் மீட்க குடவாசல் போலீஸார் விரைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x