Published : 13 Dec 2019 11:02 AM
Last Updated : 13 Dec 2019 11:02 AM

சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி ஊழல்; மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அமைச்சர் வேலுமணி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை

சென்னை மாநகராட்சியில் ஆற்று மணலுக்குப் பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (டிச.13) வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக அரசில், உள்ளாட்சித் துறையின் ஊழல்கள், மக்கள் மன்றம் மூலம் நீதிமன்றம் வரை அணிவகுத்து நிற்கின்ற இந்த நேரத்தில், சென்னை மாநகராட்சியில், 'ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்' பயன்படுத்தியதில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் என்று வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இத்துறையின் அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி மீது, ஏற்கெனவே உள்ளாட்சி ஊழல்கள் குறித்து, திமுகவின் சார்பிலும், அறப்போர் இயக்கம் சார்பிலும், 349 டெண்டர்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, "48 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்" என்று தனியாகவே ஒரு காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்து, டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல், "மழைநீர்க் கால்வாய், நடைபாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்று மணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்படுகிறது. ஆனால் பயன்படுத்தப்படுவதோ எம்-சாண்ட்" என்று, அண்மையில், சென்னையில் உள்ள ஹார்லிஸ் ரோடு நடைபாதையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஆற்று மணலை விட எம்-சாண்ட் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் விலை குறைவு என்ற நிலையில், கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகையின் சந்தை விலை 25 முதல் 30 சதவீதம் ஒப்பந்தங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதிலும் ஊழல் என்று செய்திகள் வெளிவருகின்றன.

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன? ஊழல்களை ரகசியமாக விசாரித்து வி.ஆர். எனப்படும் விஜிலென்ஸ் ரிப்போர்ட் போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இன்னும் இருக்கிறதா? இல்லையா?

அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு விஜிலென்ஸ் ரிப்போர்ட்டாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தானாக முன் வந்து விசாரித்துப் போட்டிருக்கிறதா என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன.

உள்ளாட்சி நிர்வாகத்தை, ஊழல் நாறும் நிர்வாகமாக மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முதல்வரின் வலது கரமாகவும் இடது கரமாகவும் திகழ்பவர் என்பது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரும் நன்கு அறிந்ததே!

அதனால்தான் அவருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை, திட்டமிட்டுக் கிடப்பில் போடுவதோடு மட்டுமின்றி, அவர் விரும்பும் ஊழல்களுக்கு எல்லாம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் கைகட்டி நின்று கப்பம் வசூல் செய்யும் பணியை கச்சிதமாய்ச் செய்து வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது.

குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்கும் மாநகராட்சி ஆணையர்கள், அரசு செயலாளர்கள் எல்லாம் வேலுமணியின் ஊழலுக்கு, விரும்பியோ விரும்பாமலோ துணை போவது அதிர்ச்சியளிப்பது மட்டுமின்றி, தூய்மையான, நேர்மையான, ஒளிவு மறைவற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்திற்கு அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்.

உள்ளாட்சித் துறையை நாசம் செய்துள்ள இமாலய ஊழல்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல; அத்துறையில் இதற்குத் துணை போகும் ஐஏஎஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும்!

அது போன்ற ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ஆகவே, சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள, ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் என்ற 1,000 கோடி ரூபாய் ஊழல் குறித்து, உடனடியாக உரிய விசாரணை நடத்தி, மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அமைச்சரையும், அவருக்கு துணை போகும் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளையும் விரைவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x