Published : 12 Dec 2019 07:15 PM
Last Updated : 12 Dec 2019 07:15 PM
மதுரை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக, திமுகவில் இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்களின் குடும்ப உறுப்பினர்கள், முக்கிய பெண் நிர்வாகிகள் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ள நிலையில் அவர்களில் யார் மேயர் பதவிக்கு முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை இருகட்சிகளும் ரகசியம் காக்கின்றனர்.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தவிர ஊரக பகுதிகளில் உள்ளாட்சித்தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. அதனால், மாநகராட்சிகளில் உள்ளாட்சித்தேர்தல் பணிகளை அதிமுக, திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் தற்போது வரை தொடங்கவில்லை.
கவுன்சிலர் ‘சீட்’ கேட்டு மட்டும் நிர்வாகிகள் அந்தந்த கட்சிகளில் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அதிமுக, திமுகவில் மூத்த நிர்வாகிகள் முதல் கட்சிக்கு புதிதாக வந்த இளைஞர்கள் வரை கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட மனு கொடுத்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி மேயர் பதவி ஆண்களுக்கா? பெண்களுக்கா? என்பது தெரியாமல் இருந்தநிலையில் மேயர் பதவி கனவில் இரு கட்சிகளிலும் முக்கிய விஐபி ஆண் நிர்வாகிகள் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்து இருந்தனர்.
பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால் மேயர் பதவியை கைப்பற்ற இரு கட்சிகளிலும் உள்ள முக்கிய பெண் நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், முன்னாள் மண்டல தலைவர்களின் குடும்ப பெண் உறுப்பினர்கள் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்து இருந்தனர்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் மேயர் கனவில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்த அதிமுக, திமுக முக்கிய நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது அவர்கள் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. அவர்கள் ஆர்வம் குறைந்ததால் மதுரை மாநகராட்சியில் உள்ளாட்சித்தேர்தல் ஆரவாரம் குறைந்து களையிழந்து போய் உள்ளது.
இதுகுறித்து இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:
மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று கருதியே திமுக தரப்பில், அக்கட்சி மாநகர பொறுப்பாளர் தளபதி தனது மகள் மேகலாவையும், சகோதரி காந்திமதியையும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுக்க வைத்துள்ளார்.
இவர்கள் தவிர மேயர் பதவியை குறி வைத்து முன்னாள் திமுக கவுன்சிலர் சசிகுமார் மனைவி வாசுகி, சின்னம்மாள், முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் மனைவி ராணி ஆகியோர் கட்சியில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளனர். இவர்கள் வெற்றிப்பெற்று திமுக பெரும்பான்மை கவுன்சிலர்களை பெற்றால் இவர்களில் ஒருவரே மேயராக வர வாய்ப்புள்ளது.
அதேபோல், அதிமுகவில் முன்னாள் கவுன்சிலர்களும், முக்கிய பெண் நிர்வாகிகளுமான சண்முகவள்ளி, கண்ணகி ஆகியோர் மேயர் பதவியை குறிவைத்து விருப்பமனு கொடுத்துள்ளனர்.
பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால் மேயர் பதவியை கைப்பற்ற அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா குடும்ப பெண் உறுப்பினர்கள் சிலர் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
ஆனால், செல்லூர் கே.ராஜூ, ராஜன் செல்லப்பா தரப்பில் தற்போது வரை மேயர் பதவி விவகாரங்களில் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் ரகசியம் காக்கின்றனர். வெளிப்படையாக அதற்கான முயற்சிகளையும் செய்யவில்லை.
பாஜகவில் மாநில மகளிர் அணி தலைவரும், தேசிய மின்தொகுப்பு மைய கழக அலுவல் சாரா இயக்குனருமான ஏ.ஆர்.மகாலட்சமி, கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட அக்கட்சியில் விருப்பமனு கொடுத்துள்ளார். இவர் மதுரை தெற்கு சட்டபேரவை தேர்தலில் ஏற்கெனவே எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
எம்.பி தேர்தலில் கட்சியில் ‘சீட்’ கேட்டிருந்தார். அதிமுகவுக்கு கூட்டணியில் மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டதால் இவர் போட்டியிடவில்லை.
கட்சியில் பெரிய பொறுப்பும், மத்திய அரசில் மின்வாரியத்தில் செல்வாக்கான பதவியை பெற்றுள்ள இவர் மேயர் பதவியை குறிவைத்துதான் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார். கூட்டணியில் அவர் சில பாஜக அமைச்சர்களை வைத்து மதுரை மேயர் பதவியை பாஜகவுக்கு ஒதுக்க நெருக்கடி கொடுத்து வருகிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT