Published : 12 Dec 2019 03:50 PM
Last Updated : 12 Dec 2019 03:50 PM

மெட்ராஸ் ஃபிளையிங் கிளப் மீண்டும் அமைக்கப்படுமா? - மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி

டி.ஆர்.பாலு: கோப்புப்படம்

சென்னை

ராஜாஜியின் பெயரில் பெருமைக்குரிய மெட்ராஸ் ஃபிளையிங் கிளப் மீண்டும் அமைக்கப்படுமா என, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு இன்று (டிச.12) கேள்வி நேரத்தின்போது, மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம், மெட்ராஸ் ஃபிளையிங் கிளப் மூடப்பட்டது பற்றியும், அக்கட்டிடம் இடிக்கப்பட்டது குறித்தும், கேள்வி எழுப்பினார். அப்போது, டி.ஆர்.பாலு பேசியதாவது:

"1930 ஆம் ஆண்டு, ஆங்கிலேய கவர்னர் ஜார்ஜ் ஸ்டான்லியால் உருவாக்கப்பட்டதும் இந்திய கவர்னர் ஜெனராலாக இருந்த ராஜாஜி வாழ்நாள் உறுப்பினராக இருந்ததுமான பெருமைக்குரிய மெட்ராஸ் ஃபிளையிங் கிளப்பின் வெள்ளி விழா ஆண்டில் இந்திய நாட்டின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பதெல்லாம் பெருமைக்குரிய சிறப்பு என்பதை நாடாளுமன்றம் உணர வேண்டும். அதுமட்டுமல்ல, பல ஆயிரக்கணக்கான திறமை வாய்ந்த புகழ்மிக்க விமானிகளை உருவாக்கி சரித்திரம் பெற்ற அமைப்பு இது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

ஆனால், இந்த பயிற்சி அமைப்பை மூடியது மட்டுமல்லாமல், பழமை வாய்ந்த புராதன கட்டிடம் இடிக்கப்பட்டது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.

மிகவும் பழமை வாய்ந்த மெட்ராஸ் ஃபிளையிங் கிளப்பின் புராதன கட்டிடத்தை இடிப்பதற்கு கலாச்சாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதா?

அதுமட்டுமன்றி, இந்த அமைப்பை, மீண்டும் என்னுடைய தொகுதியிலேயே ராஜாஜியின் பெயராலேயே நிறுவிட மத்திய அரசு முன்வருமா? அப்படி நிறுவும்போது சென்னை விமான நிலைய ஒடுபாதைக்கு பதிலாக, வேலூர் விமான ஒடுதளத்தை பயன்படுத்திக் கொண்டு, சென்னையில் அதன் பயிற்சி நிலையம் அமைக்கப்படுமா?" என டி.ஆர்.பாலு கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "மெட்ராஸ் ஃபிளையிங் கிளப் அமைப்பை இந்திய விமான ஆணையம் மூடிவிட்டது குறித்தும் அக்கிளப்பின் பழமை வாய்ந்த நூறாண்டு கட்டிடம் இடிக்கப்பட்டது குறித்துமான விவரங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கேட்டு, மேற்கொண்டு எத்தகைய முடிவை மேற்கொள்ளலாம் என்பதை டி.ஆர்.பாலுவிடம் தெரிவிக்கிறேன்” என பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x