Published : 12 Dec 2019 12:46 PM
Last Updated : 12 Dec 2019 12:46 PM

காங்கிரஸிலிருந்து ராயபுரம் மனோ விலகல்: கனத்த இதயத்தோடு வெளியேறுவதாக அறிவிப்பு

காங்கிரஸிலிருந்து விலகுவதாகவும், அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி நிற்க விரும்புவதாகவும் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் சென்னை மாவட்டத்தில் முக்கியத் தலைவராக மாநில அளவில் அறியப்பட்டவர்களில் ராயபுரம் மனோ முக்கியமானவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த ராயபுரம் மனோ மூப்பனாரின் தீவர ஆதரவாளராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியிலிருந்து மூப்பனார் பிரிந்து தமாகா உருவானபோது ராயபுரம் மனோவும் தமாகாவில் இணைந்தார்.

மூப்பனார் மறைவுக்குப் பின்னரும் தொடர்ந்து தமாகாவிலேயே இருந்த அவர் பின்னர் ஜி.கே.வாசன் காங்கிரஸுக்குத் திரும்பியபோது தானும் காங்கிரஸுக்குத் திரும்பினார். காங்கிரஸில் வாசனின் முக்கிய ஆதரவாளராக விளங்கிய அவர் வாசன் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.

பின்னர் வாசன் மீண்டும் காங்கிரஸிலிருந்து வெளியேறியபோது மனோ காங்கிரஸிலேயே இருந்தார். சில காலம் திருநாவுக்கரசர் ஆதரவாளராக இருந்தார். சென்னையில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவது, விழாக் கூட்டங்கள் நடத்துவது என காங்கிரஸ் கட்சியில் பரபரப்பாக இயங்கியவர் மனோ.

சமீபகாலமாக ப.சிதம்பரம் ஆதரவாளராக இருக்கும் மனோ சத்தியமூர்த்தி பவனில் ரூ.20 லட்சம் செலவில் பிரம்மாண்ட கொடிக்கம்பத்தை அமைத்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கான அனைத்து வேலைகளையும் செய்து ஆட்களைக் கொண்டுவந்தவர் மனோ. ஆனாலும் அவர் பெயரைக்கூட மேடையில் உச்சரிக்காமல் தலைவர்கள் புறக்கணித்தது அவருக்கு மன வேதனையைத் தந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பதவி தனக்கு அளிக்கப்படும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் மனோ பணியாற்றினார். அல்லது மாநில நிர்வாகிகளில் ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என நீண்ட நாட்களாக அவர் முயற்சித்து வந்த நிலையில் அவருக்கான அங்கீகாரத்தை எந்தத் தலைவரும் பேசி வாங்கித் தரவில்லை என்பதால் விரக்தியின் எல்லைக்கே சென்ற மனோ விலகும் முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று தான் காங்கிரஸிலிருந்து விலகுவதாகவும், அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி நிற்க விரும்புவதாகவும் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராயபுரம் மனோ இன்று வெளியிட்ட அறிக்கை:

“காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்பதை தலைமைக்கும், கட்சி நண்பர்களுக்கும் நான் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் என்ற முறையில் பல நூறு நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறேன்.

கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளை ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக நடத்தி அவர்கள் பெருமைகளை, சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி இந்த இயக்கம் வலுவான இயக்கமாக உருப்பெற்று தமிழகத்தை ஆள வேண்டும் என்ற என்னை முழுமையாக அர்ப்பணித்து தொடர்ந்து 30 ஆண்டு காலமாக நேரு குடும்பத்திற்கு விசுவாசமாக உணர்வுபூர்வமாக மனநிறைவுடன் பணியாற்றினேன்.

எனக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப் படுகின்ற காரணத்தினால் ஆடுகளத்தில் (காங்கிரஸ் கட்சி) இருந்து விலகி பார்வையாளராக (பொதுமக்கள்) செயல்பட ஆசைப்படுகின்றேன். காங்கிரஸில் மனநிறைவோடு பணியாற்றினேன்,

இன்று மனநிறைவோடு விடைபெறுகின்றேன். இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்துத் தலைவர்களுக்கும், என்னோடு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன். என் மக்கள் நலப் பணி தொடரும்”.

இவ்வாறு ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x