Published : 11 Dec 2019 04:05 PM
Last Updated : 11 Dec 2019 04:05 PM

இது பாமர இந்தியாவல்ல; உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க: கமல்

இந்தியாவை ஒருசாரர் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை. பாமர இந்தியாவல்ல உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க. இளம் இந்தியா விரைந்து குடியுரிமை சட்ட மசோதா போன்ற திட்டங்களை நிராகரிக்கும் என கமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் நேற்று முன் தினம் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா முஸ்லிம்களுக்கு விரோதமானது எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அவையில் கடுமையாகப் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல் இன்று வெளியிட்ட அறிக்கை:

''அரசியலமைப்புச் சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது. ஆனால் பிழை இல்லா நல் அமைப்பைத் திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகமே.

நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்திற்கு நிகரானது இன்று மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும். இந்தியாவை ஒருசாரர் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை.

காந்தியின் 150-வது பிறந்த நாளை, அவர் மறைவு நாளாக மாற்றிவிட்டால் அவர் கனவு கண்ட இந்தியா உருத்தெரியாமல் அழிந்துவிடுமா என்ன?

முயன்று தோற்றவர், மீண்டும் முயல்கின்றனர். இது “பாமர இந்தியாவல்ல” உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க.

“இளம் இந்தியா” விரைந்து இது போன்ற திட்டங்களை நிராகரிக்கும். எங்கள் தாய்நாட்டை தந்தையர் நாடாக மாற்ற முயலும் பிதா மஹாக்களுக்கு இது புரிய வேண்டும்.

மய்யத்தின் வாதம், “இதில் கொஞ்சம்“, “அதில் கொஞ்சம்“ கலந்து பசியாறும் சந்தர்ப்பவாதமல்ல.

நமக்குப் பின்னும் நல்லதே நடக்க வித்திடும் சிந்தனைகளைப் பற்றித் தொடரும் பெருங்கூட்டம் நாம்.

அச்சிந்தனைகளை மய்யம் கொள்ளச் செய்யச் சூளுரை ஏற்றவரே எம் மய்யத்தார்''.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x