Published : 11 Dec 2019 03:40 PM
Last Updated : 11 Dec 2019 03:40 PM
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வார்டு உறுப்பினர் முதல் தலைவர்கள் வரை அனைத்து பதவிக்கும் 2011 மக்கள்தொகை அடிப்படையில்தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். மேலும், 9 புதிய மாவட்டங்களுக்கு 3 மாதத்தில் தேர்தலை நடத்தவும் மாநில தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி களுக்கு, வரும் 27, 30 ஆகிய தேதி களில் 2 கட்டமாக தேர்தல் அறி விக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இதற் கிடையே, ‘பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 2011 மக்கள்தொகை அடிப்படை யில் இடஒதுக்கீடு வழங்காமல் 1991 மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி இடஒதுக்கீடு வழங்கியிருப் பது சட்டவிரோதம். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணை யம் தரப்பில் தாக்கல் செய்யப் பட்டிருந்த பதில் மனுவில், ‘டிச.7-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப் பாணைப்படி இந்தத் தேர்தலுக் கான எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கான விகிதாச்சார இடஒதுக்கீடு, சுழற்சி முறை என்பது 2011 மக்கள்தொகை அடிப்படையிலேயே வழங்கப்பட் டுள்ளது. மனுதாரர்கள் கூறுவது போல 1991 மக்கள்தொகை அடிப் படையில் வழங்கப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் அப்துல் நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோரும், தமிழக அரசு தரப் பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி, மாநில தேர்தல் ஆணை யம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக் கறிஞர் ப.சிதம்பரமும் ஆஜராகி வாதிட்டனர்.
நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு:
அபிஷேக் மனு சிங்வி: உள்ளாட் சித் தேர்தலுக்கு பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டரீதியாக வழங்கப்படவில்லை. ஆகவேதான் தடை கோருகிறோம்.
முகுல் ரோத்கி: ஏற்கெனவே மறுவரையறையை காரணம் கூறி வழக்கு தொடர்ந்தனர். தற்போது இடஒதுக்கீடு என்கின்றனர். ஏற் கெனவே உச்ச நீதிமன்றம் உள்ளாட் சித் தேர்தலை நடத்த உத்தர விட்டுள்ளது. மீண்டும் தடை கோருகின்றனர்.
நீதிபதிகள்: இந்த வழக்கின் சாராம்சம் என்ன?
திமுக வழக்கறிஞர்கள்: தொகுதி மறுவரையறை 2011 மக்கள்தொகை அடிப்படையில் செய்துவிட்டு, இடஒதுக்கீட்டை மட்டும் பழைய மக்கள்தொகை அடிப்படையில் செய்வதைத்தான் தவறு என்கிறோம். அதாவது வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு 2011 மக்கள்தொகையை கடைபிடிக் கின்றனர். ஆனால், பஞ்சாயத்து தலைவர், யூனியன் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் போன்ற தலைவர்கள் பதவிகளுக்கு 1991 மக்கள்தொகையை கடைபிடிக் கின்றனர். அதேபோல, சுழற்சிமுறை மற்றும் பெண்களுக்கான இடஒதுக் கீடும் 2011 மக்கள்தொகை அடிப் படையில் மேற்கொள்ளப்பட வில்லை.
இடஒதுக்கீடு தொடர்பாக 2016-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டு, புதிய ஆணை பிறப் பிக்கப்பட்டுள்ளது என்கின்றனர். ஆனால், 2016-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பாணை 1991 மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டது என ஏற்கெனவே இதே ஹன்ஸ்ராஜ் வர்மாதான் சென்னை உயர் நீதிமன்றத்திலும் தெரிவித்திருந்தார். ஆனால், தற் போது மறுவரையறை, இடஒதுக்கீடு என அனைத்துப் பணிகளையும் சட்டரீதியாக முடித்த பின்னரும் பழைய எண்களில் மாற்றமில்லை என்கின்றனர்.
இதில் இருந்தே 1991-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப் படையிலேயே ஊராட்சி, ஒன்றியக் குழு, மாவட்ட ஊராட் சித் தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு அளித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. தற்போது புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக் கப்பட்டுள்ளன. மறுவரையறை மட்டுமே 2011 மக்கள்தொகை அடிப் படையில் மேற்கொள்ளப்பட்டுள் ளது. எனவேதான் தடை கோருகிறோம்.
(அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், உங்களின் வாதத்தை முடிக்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்றனர்.)
முகுல் ரோத்கி: இவர்கள் தொடர்ந்து வாதிட்டுக்கொண்டே இருந்தால் அதற்கு நானும் விரி வான விளக்கம் அளிக்க நேரிடும்.
நீதிபதிகள்: இருதரப்புமே வாதத்தை சுருக்கமாக முடியுங்கள். 2011 மக்கள்தொகைப்படி மறு வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படியே இட ஒதுக்கீடு கடைபிடிக்க வேண்டும் என கோருகிறீர்கள். 2011 மக்கள் தொகைப்படி ஊராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கும் தேர்தல் நடந்தால் சம்மதமா?
அபிஷேக் மனு சிங்வி: அதைத்தான் ஆரம்பத்தில் இருந்து கோரி வருகிறோம்.
காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் ப.சிதம்பரம்: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் 9 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. அந்த மாவட்டங்களில் இன்னும் மறுவரையறை செய்யப் படவில்லை என்பதால் எத்தனை பதவிகளுக்கு தேர்தல் என்பதை மாநில தேர்தல் ஆணையத்தால் உறுதியாக கூற முடியவில்லை.
முகுல் ரோத்கி: மனுதாரர்கள் தரப்பில் கூறுவது அனைத்தும் தவறு.
நீதிபதிகள்: உள்ளாட்சித் தேர் தல் தொடர்பாக எல்லா சட்டவிதி களையும் முறையாக கடைபிடிப் போம் என்றுதானே கடந்த முறை தெரிவித்தீர்கள்.
முகுல் ரோத்கி: ஆம். முறையாக கடைபிடித்துள்ளோம். தற்போது இவர்கள் கூறும் தகவல்கள் அனைத்தும் பொய். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களுக்கு மட்டும்தான் தற்போது தேர்தல் நடக்கவுள்ளது. 2011 மக்கள்தொகை அடிப்படை யில்தான் மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1991 மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறுவது தவறு.
இவ்வாறு வாதம் நடந்தது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘இப்போதுள்ள சூழலில் உள்ளாட் சித் தேர்தலை நடத்த எந்தத் தடையும் விதிக்க முடியாது. அதேநேரம், வார்டு உறுப்பினர்கள் முதல் தலைவர்கள் வரை அனைத்து பதவிக்கும் 2011 மக்கள்தொகை அடிப்படையில் உள்ளாட்சித் தேர் தலை நடத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், புதிய 9 மாவட் டங்களுக்கும் மறுவரையறைப் பணிகளை சட்டரீதியாக முடித்து 3 மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT