Published : 11 Dec 2019 02:19 PM
Last Updated : 11 Dec 2019 02:19 PM

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடையாது; மத்திய அரசு கைவிரிப்பு: வேல்முருகன் கண்டனம்

வேல்முருகன்: கோப்புப்படம்

சென்னை

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என்று கைவிரித்ததாக, மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் இன்று (டிச.11) வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்ற மக்களவையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா, "தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு திட்டம் கிடையாது" என்று கைவிரித்தார். உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர், "தொழிற்சாலைகள் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொண்டுவரும் திட்டம் இந்த அரசுக்கு இல்லை" என்றார்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு ஒரு தீர்வாகாது என்று கூறிய அமைச்சர், "பட்டியல் இனத்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்க, அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வேண்டுமானால் அளிக்கத் தயார்" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா வகிப்பது பேருக்குத்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையே தவிர உண்மையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான துறை அல்ல. அரசு துறை மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புப் பதவிகள் அனைத்தும் அமைச்சரின் துறை சார்ந்தவையாய் இருக்கையில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் எப்படி சமூக நீதியை நிலைநாட்ட முடியும்; அனைத்து மக்களுக்கும் அதிகாரமளிக்க முடியும்?

இந்தியா முழுவதுமுள்ள அரசுத் துறைகள், ரயில்வே, வங்கிகள் மற்றும் அரசமைப்புச் சட்ட நேரடி அமைப்புகளான உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, தேசிய தேர்தல் ஆணையம், உளவு அமைப்புகள், புலனாய்வு அமைப்புகள், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை என அனைத்திலுமே சமூக நீதியும் அதிகாரமளித்தலும் அறவே இல்லை. இவற்றிலெல்லாம் இன்றும் உயர் சாதியினர் ஆதிக்கம்தான்; 90 விழுக்காடு அவர்கள்தான்.

மத்திய அமைச்சரவை மற்றும் பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்களைத்தான் பார்ப்போமே! இவற்றுக்கு வாக்களித்தவர்கள் 95 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்தான். ஆனால் அமைச்சராக இருப்பவர்கள் 50 விழுக்காட்டினருக்கு மேல் உயர் ஜாதியினர்தான்; அவர்களுக்குத்தான் முக்கிய கேபினட் அமைச்சர் பதவிகள்!

அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மகாராஷ்டிரத்தையே எடுத்துக் கொள்வோம். அங்கு பாஜகவுக்கு 104 எம்எல்ஏக்கள்தான். இதில் 35 பேர் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 37 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள், 18 பேர் பட்டியல் இனத்தவர். ஆனால் முதல்வராக இருந்த பட்னாவிஸ் பிராமண சமூகத்தவர். போதுமா? இதே நிலைதான் பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும்.

ஆக, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை என ஒன்று மத்தியில் இருப்பதும் அதற்கென்று கேபினட் அமைச்சர் ஒருவர், இணை அமைச்சர் ஒருவர் மற்றும் இந்தத் துறைக்கென்று அலுவலகங்கள், அதில் பணியாளர்கள் இருப்பதும் மக்கள் பணத்தில் தண்டச் செலவன்றி வேறென்ன?

அண்மையில் திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானங்களில் ஒன்று, தனியார் துறை வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு என்பது. இது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று என்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம்.

எனவேதான் நாடாளுமன்ற மக்களவையிலேயே தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என்று கைவிரித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியாவுக்கும் மத்திய அரசுக்கும் எமது கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x