Published : 10 Dec 2019 12:50 PM
Last Updated : 10 Dec 2019 12:50 PM

கடற்கரை மணலில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதை அமைக்கக் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலில் குளிப்பதும், கடல் அலைகளில் கால் நனைப்பதும், அலைகளை அருகாமையில் நின்று பார்ப்பதையும் யார்தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் கால் ஊனமடைந்து சக்கர நாற்காலியில் வாழ்க்கையைத்தள்ளும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை மணலில் சென்று கடலை ரசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதே சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் ஆதங்கம்.

அதைப்போக்க இந்த ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிச.3-ம் தேதி சென்னை மாநகராட்சி சார்பில், கடற்கரை சர்வீஸ் சாலையிலிருந்து கடலை நோக்கிச் செல்ல கடற்கரைச் மணற்பரப்பில் மரப்பலகையாலான தற்காலிக சாய்தளம் அமைக்கப்பட்டு ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகில் சென்று கடலலையில் தங்கள் கால்களை நனைத்தனர்.

தசை சிதைவு, முதுகு தண்டுவடம் , கால் வளர்ச்சியின்மை போன்ற பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலிகள் மூலம் மெரினா சர்வீஸ் சாலையிலிருந்து, கடற்கரை மணற்பரப்பை கடந்து அலைகள் அருகே செல்வதை சாத்தியமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி அமைத்த சாய்தள பாதை மற்றும் வாகனம் மக்களை பெரிதும் கவர்ந்து வரவேற்பை பெற்றது.

சென்னை முழுதுமிருந்து மாற்றுத் திறனாளிகள், தங்களது சக்கர நாற்காலியில் சாய்தளம் வழியாக கடலலைகள் வரும் இடம் வரை சென்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் அமைக்கப்படும் இந்த சாய்தளப்பாதையை இரண்டு நாட்களில் சென்னை மாநகராட்சி அகற்றி விடுகிறது.

இந்நிலையில் வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் கே.கேசவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “சாய்தள பாதையை அகற்றாமல் நிரந்தர பாதையாக மாற்றக்கோரி தமிழக தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், சமூக நலத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு டிசம்பர் 4-ம் தேதி மனு ஒன்றை அனுப்பியுள்ளேன்.

அந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்”. எனக்கோரியுள்ளார். அவரது வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, மனுதாரர் கேசவன் தரப்பில் வழக்கறிஞர் சங்கர சுப்பு, ரமேஷ் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் தம்பிதுரை, சென்னை மாநகராட்சி தரப்பில் சௌந்தரராஜன் ஆகியோர் ஆஜரானார்கள்.

வழக்கு குறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஒரு வாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் அமர்வு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x