Published : 10 Dec 2019 11:51 AM
Last Updated : 10 Dec 2019 11:51 AM
மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சிகளில் மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக, கடந்த நவம்பர் 19-ம் தேதி தமிழக அரசு, அவசர சட்டம் பிறப்பித்தது.
இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், மாநகராட்சி மேயர், நகராட்சி- பேரூராட்சி தலைவர் பதவிகளில் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தால், மன்றத்தை சுமூகமாக நடத்த முடியாது என்பதால் இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் கட்சி அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை எனவும், மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நேர்முக தேர்தல் தான் நடத்தப்பட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மறைமுக தேர்தல் நடத்த மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவியும், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பதவியும் வெவ்வேறானவை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று (டிச.10) விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்பதால், தமிழக அரசின் அவசர சட்டம், அரசியல் சட்டம் மற்றும் ஜனநாயக விரோதமானது என வாதிட்டார்.
தன்னை குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டுமென கூறுவது சட்டப்படியான உரிமைதானே தவிர, அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை இல்லை என விளக்கமளித்த நீதிபதிகள், நேர்முக தேர்தலை மறைமுக தேர்தலாக மாற்றியதை ஜனநாயக விரோதமானது என்றோ அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றோ கூற முடியாது என கூறி தொல்.திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT