Published : 10 Dec 2019 10:58 AM
Last Updated : 10 Dec 2019 10:58 AM
பி.டி.ரவிச்சந்திரன்
எகிப்து, நைஜீரியா, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சின்ன வெங்காயம் தொடர் தட்டுப்பாட்டால் விலை யில் மாற்றமின்றி உயர்ந்தே காணப்படுகிறது.
தமிழகத்தில் வெங்காய மார்க்கெட்டுகளில் பெரியதான திண்டுக்கல் வெங்காய மார் க்கெட் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செயல்படுகிறது. மார்க்கெட் செயல்படும் நாட்களில் பெரிய வெங்காயம் நாளொன்றுக்கு 200 டன் வீதம் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து லாரிகளில் விற்பனைக்குக் கொண்டுவரப்படும். சின்ன வெங்காயம் அரியலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து நாளொன்றுக்கு 40 டன் விற்பனைக்கு வரும். தற்போது ஒரு டன் வெங்காயம் மட்டுமே வரத்து உள்ளது.
இந்நிலையில், வட மாநிலங் களில் வெள்ளச்சேதம் காரணமாக பெரிய வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்தது. ஒரு கட் டத்தில் சின்ன வெங்காயத்தின் விலையையும் கடந்து பெரிய வெங்காயம் விலை அதிகரித்தது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனையானது.
இதையடுத்து பெரிய வெங்காயத்தின் விலையைக் குறைக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி எகிப்து, நைஜீரியா, துருக்கி ஆகிய நாடுகளில் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு கப்பல்கள் மூலம் சில தினங்களுக்கு முன் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தது. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பெரிய வெங்காயம் கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டன. திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு நேற்று இரண்டு கன்டெய்னர்களில் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து சில்லறை விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். பெரிய வெங் காயம் இறக்குமதியால் நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனையானது. வெளிநாட்டு வெங்காயம் பார்ப்பதற்கு நம் நாட்டில் விளை விக்கப்படும் வெங் காயங்களைப் போல் அல்லாமல் அடர் சிவப்பு நிறத்தில் உள்ளது.
திண்டுக்கல் வெங்காய மார் க்கெட் கமிஷன் கடையைச் சேர்ந்த லட்சுமணன் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் என் பதால் வரத்து அதிகரித்து விலை படிப்படியாக குறைந்து தைப் பொங்கலுக்குள் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.50-க்குள் விற்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் சின்ன வெங்காயம் நம் நாட்டில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. இதனால், இதை இறக்குமதி செய்ய வாய்ப்பில்லை. விலையும் குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT