Published : 10 Dec 2019 10:56 AM
Last Updated : 10 Dec 2019 10:56 AM
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம், பல ஊர்களிலும் கடைகளில் சந்தைப் பொருளாக விற்கப்படுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பதி கோயிலுக்கு லட்டு என்றால் பழநிக்கு பஞ்சா மிர்தம். அதன் சுவையும் அலாதி யானது. பழநி கோயிலுக்கு வெளியூர், வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகத்திலேயே அதிக வருவாய் உள்ள பாரம்பரியமிக்க கோயிலின் பிரசாதமாக பஞ்சாமிர்தம் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயில் நிர்வாகம் கோயில் தேவைகள் மற்றும் அபிஷேகங்களுக்கு மட்டுமே பஞ்சாமிர்தம் தயாரித்து வந்தது. இதனால் தனியார் பஞ்சாமிர்தம் விற்பனை செய்து வந்தனர். பழநி வரும் பக்தர்கள் ஊருக்குத் திரும்பிச் செல்லும்போது மறக்காமல் வாங்கிச் செல்வது பஞ்சாமிர்தம்தான்.
பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரித்ததையடுத்து, கோயில் நிர்வாகமே பஞ்சாமிர்தத்தை பாரம்பரியமாகத் தயாரித்து அரைகிலோ பேக்குகளில் விற்கத் தொடங்கியது. மலைக்கோயிலில் உள்ள ஸ்டால்கள், அடிவாரம், பேருந்துநிலையம் ஆகிய இடங் களில் கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் விற்பனைக்கு வைக்கப்பட்டது. பக்தர்களும் தனியாரை விட கோயில் பஞ்சாமிர்தத்தையே விரும்பி வாங்கிச் சென்றனர். இதற் கிடையே நூற்றாண்டு பழமையான பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவி சார் குறியீடும் வழங்கப்பட்டு பாரம்பரியமிக்க உணவுப் பொருளாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சா மிர்தத்தை சிலர் மொத்தமாக வாங்கி பல ஊர்களிலும் கடை களில் விற்கத் தொடங்கி உள்ளனர்.
ஐயப்ப பக்தர்களை கவர்வதற் காக கேரள மாநிலம் குமுளியில் உள்ள கடைகளில் பழநி கோயில் பஞ்சாமிர்தம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தனியார் தயாரிக்கும் பஞ்சாமிர்தம் சந்தைப் பொருளாக விற்கப்படுவது போல், கோயில் நிர்வாகம் தயாரிக்கும் பஞ்சாமிர்தத்தையும் கடைகளில் விற்பனை செய்வது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலோனோர் சபரிமலை சென்றுவிட்டு நேராக பழநி சென்று முருகனை தரிசித்துவிட்டுத் தான் வீட்டுக்குச் செல்வர். அப்போது மறக்காமல் பஞ்சாமிர்தம் வாங்கிச் செல்வர். ஆனால், தற்போது சந்தைப் பொருளாக இதை மாற்றி பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பழநி கோயில் பஞ்சாமிர்தத்தை விற்பனை செய்வது பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து சிவசேனா மாவட் டச் செயலாளர் அசோக்பாபு கூறுகையில், பழநி கோயில் பஞ்சாமிர்தத்தை மொத்தமாக கொள்முதல் செய்து, பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் விற்பது வேதனை தரும் விஷயம். இதுகுறித்து பழநி கோயில் இணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளோம்.
கோயில் பஞ்சாமிர்தத்தை மொத்தமாக வாங்கிச் சென்று விற்பனைக்கு கொடுப்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment