Published : 10 Dec 2019 10:31 AM
Last Updated : 10 Dec 2019 10:31 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் புறநகரில் வளர்ச்சியடைந்த ஊராட்சிகளில் பதவிகளை பிடிக்க தயாராக இருந்த அரசியல் பிரமுகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் கடந்த மாதம் 29-ம் தேதி உதயமானது. முதல்வர் பழனிசாமி புதிய மாவட்டத்தின் நிர்வாக பணிகளை செங்கல்பட்டில் தொடங்கிவைத்தார். இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையம் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் வளர்ச்சியடைந்த ஊராட்சிகளான கேளம்பாக்கம், படூர், நாவலூர், தாழம்பூர், கோவளம், மேலக்கோட்டையூர், தையூர் உள்ளிட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளைப் பிடிப்பதற்காக, தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சி பிரமுகர்கள் தயாராகினர்.
இதற்கிடையே, புறநகர் பகுதிகளான மேற்கண்ட ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வடகிழக்கு பருவ மழையால் குடியிருப்பு மற்றும் அரசு பள்ளிகளை மழைநீர் சூழ்ந்தது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மேற்கண்ட பகுதிகளில் அரசியல் கட்சி பிரமுகர்கள் போட்டி போட்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும், கிராம மக்களின் ஆதரவை பெறுவதற்காக மழையால் சேதமடைந்த சாலைகளை சொந்த பணத்தில் செலவு செய்து சீரமைக்கும் பணிகளையும் மேற்கொண்டனர். இதற்காக பல லட்சங்களை செலவு செய்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, மேற்கண்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 28 மாவட்டங்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதன்பேரில், பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், புறநகர் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த ஆளுங்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் முகாமிட்டுள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், சாலை சீரமைப்புக்காக செலவு செய்த தொகையை, ஊராட்சி மன்ற நிர்வாகங்களின் மூலம் சீரமைக்கப்பட்டதாக கணக்கு காட்டி திரும்பப்பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT