Published : 10 Dec 2019 09:00 AM
Last Updated : 10 Dec 2019 09:00 AM
உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக பெண்களுக்கு 50 சத வீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதால் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தகுதி யான பெண் வேட்பாளர்களைத் தேடுவதில் திணறி வருகின்றன
தமிழகத்தில் 3 ஆண்டுகள் காலதாமதத்துக்குப் பிறகு 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் நடை பெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 16-ம் தேதி கடைசி நாளாகும்.
27 மாவட்டங்களில் உள்ள 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவர்கள், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கட்சி சார்பின்றி தேர்தல் நடை பெறவுள்ளது. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் சுயேட்சை சின்னங்களே ஒதுக்கப்படும்.
308 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் பங்கேற்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. உள் ளாட்சித் தேர்தலில் இதுவரை பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக் கீடு அமலில் இருந்தது. இந்தத் தேர்தலில் முதல்முறையாக பெண் களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேடி வருகின்றன. 33 சதவீத இடஒதுக்கீடு இருக்கும்போதே 90 சதவீத இடங்களில் அரசியல் கட்சிகளில் உள்ள நிர்வாகிகள், தங்களின் தாயார், சகோதரிகள், மனைவி, மகள், மருமகள் என குடும்பத்தினரையே நிறுத்தி வெற்றி பெற வைத்தனர்.
தற்போது அரசியலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை கணிச மாக அதிகரித்துள்ளது. ஆனாலும், அரசியல் கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினரே 50 சதவீத அளவுக்கு போட்டியிடும் சூழல் உள்ளதாக திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் 'இந்து தமிழ்' நாளிதழிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "மக்களவை, சட்டப் பேரவை தேர்தல்களைவிட உள் ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் களைத் தேர்வு செய்வது சவா லானது. தேர்தல் என்றாலே வெற்றி வாய்ப்புள்ளவர்களைக் கண்ட றிந்துதான் நிறுத்த வேண்டும். சில சமயங்களில் வெற்றி வாய்ப் புள்ள வேட்பாளர்கள் இருந்தால் அது பொதுத் தொகுதியாக, எஸ்.சி., எஸ்.டி.-க்கு ஒதுக்கப்பட்டத் தொகுதியாக அல்லது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி யாக இருக்கும். பெண்களுக்கான தொகுதியாக இருந்தால் தகுதியான வேட்பாளர்கள் கிடைக்காது.
இதுபோன்ற சிக்கல்கள் வரும் என்பதை அறிந்து, தகுதியான பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்யுமாறு மாவட்டச் செயலாளர் களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல மாதங்களுக்கு முன்பே அறிவுறுத்தி இருந்தார். ஆனால், பெண் வேட்பாளர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கவே செய்கிறது’’ என்றார்.
அதேபோல், பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக் கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சி களில் உள்ள முக்கியமான ஆண் நிர்வாகிகள் புதிய சிக்கலை சந் திக்க வேண்டியிருப்பதாக அதிமுக நிர்வாகி ஒருவர் தெரிவிக்கிறார்.
அப்படி என்ன சிக்கல் என்று அவரிடம் கேட்டபோது, "ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவி என்பது மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் போல மிக முக்கியமான பதவி. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினராக இருந்தால்தான் இப்பதவிக்கு போட்டியிட முடியும். ஒன்றியச் செயலாளர் மட்டுமல்ல, பல இடங்களில் மாவட்டச் செயலாளர் கள்கூட ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள்.
கடந்த காலங்களில் இப்பதவியில் இருந்த பலர் எம்எல்ஏ.வாகி அமைச்சர்களாகியுள்ளனர். ஆனால், 50 சதவீத இடஒதுக்கீட்டில் பெரும்பாலான நிர்வாகிகள் சொந்த தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அருகில் உள்ள பொதுத் தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகின்றனர். வேறு வார்டில் போட்டியிட்டால் அங்குள்ள கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்த வேண்டும். அது பெரிய வேலை" என்றார்.
50 சதவீத இடஒதுக்கீட்டால் ஒருபக்கம் பெண் வேட்பாளர்கள் கிடைக்காமல் அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன. மறுபக்கம் கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆண்கள், போட்டியிட தொகுதி கிடைக்காமல் அவதிப் படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT