Published : 08 Aug 2015 11:04 AM
Last Updated : 08 Aug 2015 11:04 AM
மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் முழு வீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போராட்டங்களுக்கு அச்சார மிட்டது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள உண்ணாமலைக்கடை என்னும் கிராமம்தான்.
உண்ணாமலைக்கடை கிராமத்தில் அரசுப் பள்ளி, தேவாலயம் ஆகியவற்றின் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டங்களை அப்பகுதி மக்கள் முன்னெடுத்து வந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்ட பின்னரும் கடை அகற்றப்படவில்லை.
கடந்த 31-ம் தேதி இங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மது ஒழிப்புப் போராளி சசிபெருமாள் செல்பேசி கோபுரம் மீது ஏறி நின்று போராடியபோது உயிர் இழந்தார். .
உண்ணாமலைக்கடை பகுதியில் சசிபெருமாளுக்கு மிகப்பெரிய கண்ணீர் அஞ்சலி பதாகை வைக்கப்பட்டுள்ளது. ஊர் முழுவதுமே சோகத்தில் உறைந்து போயுள்ளது. சர்ச்சைக்குரிய அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டு, அதன் முன்பே சசிபெருமாள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மதுவுக்கு எதிராக இத்தனை பெரிய கிளர்ச்சி ஏற்பட உண்ணாமலைக்கடை அடித்தளம் அமைத்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மது போதைக்கு எதிரான பொது மக்கள் இயக்கத்தை சேர்ந்தவருமான ராபர்ட் குமார் கூறியதாவது:
2012 அக்டோபர் 2-ம் தேதி உண்ணாமலைக்கடை, பெருங்குழி, பயணம், பம்மம், ஆயிரந்தெங்கு என 5 கிராம மக்கள் ஒருங்கிணைந்து இந்த இயக்கத்தை ஆரம்பித்தோம். ஆரம்பித்த நோக்கமே ஊருக்குள் உள்ள இந்த மதுக்கடையை மாத்துறதுதான். எங்க அமைப்பில் 21 அங்கத்தினர்களும், 8 சிறப்பு அழைப்பாளர்களும் இருந்தாங்க. 21 அங்கத்தினரில் ஒருத்தர் இதே டாஸ்மாக் கடையோட பாரை ஏலம் எடுத்து நடத்த ஆரம்பிச்சுட்டாரு. உடனே அவரை நீக்கிவிட்டோம்.
எங்க அமைப்பை ஆரம்பிச்ச அன்னிக்கே மது போதைக்கு எதிரான வாகன பேரணியை கன்னியாகுமரியில் இருந்து உண்ணாமலைக்கடை வரை நடத்துனோம். 14.2.2013 அன்று பள்ளி, தேவாலயங்களுக்கு பக்கத்தில் இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை அகற்றச் சொல்லி அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். 19.3.2013-ல் இயக்கம் சார்பில் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தோம். இதில் உயர்நீதிமன்ற மதுரை கிளை 20.2.14 அன்று டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.
அதே ஆண்டு மார்ச் 25-ம் தேதி கடையை மாத்த நடவடிக்கை எடுக்குறதா டாஸ்மாக் மேலாளர் கடிதம் அனுப்புனாரு. அதுல இருந்து இதுவரை 7 கடிதம் இதே மாதிரிதான் வந்துருக்கு. அதுவும் நாங்க முதல்வரின் தனிப் பிரிவுக்கு கடிதம் அனுப்புனதாலதான். 30-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போறதையும் அமைப்பு சார்புல 29-ம் தேதி ஆட்சியரையும், ஏஎஸ்பியையும் நேர்ல பாத்து விளக்கி சொன்னோம்.
இப்போ எங்க ஊருல இருந்த டாஸ்மாக் கடை போயிடுச்சு. ஆனா தமிழ்நாடு முழுசும் மதுவிலக்குக்காக களம் ஆடுன சசிபெருமாள் கூட இல்லியே. அவர் இறப்புக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதுக்கும் பூரண மதுவிலக்குக் கொண்டுவர வேண்டும்” என்றார்.
உண்ணாமலைக் கடை டாஸ்மாக் கடையில் இருந்து 102 மீட்டருக்குள் உள்ளது அரசு பள்ளிக்கூடம். தேவாலயமும், பேருந்து நிறுத்தமும் 100 மீட்டருக்குள் உள்ளன. அந்த பள்ளிக் கூடத்துக்குச் சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவர், `அங்கிள் முன்னெல்லாம் ஸ்கூல் விட்டு வந்தா, ரோட்ல குடிச்சுட்டு நின்னு அசிங்கமா பேசுவாங்க. 7 நாளா அந்த பிரச்சினை இல்ல. ஆனா அதுக்காக பாடுபட்ட அந்த தாத்தா இப்போ இல்லியே’ என்றது அந்த பிஞ்சு மனம்.
கடை மாற்றம்
சசிபெருமாள் உயிர் இழந்தததைத் தொடர்ந்து அன்றைய தினமே உண்ணாமலைக்கடையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைக்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக தடை விதித்தது. அந்த கடை மூடப்பட்டு பக்கத்து ஊரான நட்டாலம் ஊராட்சி, வாகைவிளை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் இங்கிருந்த மதுக்கடையை மூடுவதற்கான போராட்டத்தில்தான், காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்தார். ஆட்சியர் உத்தரவால் இக்கடை மூடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT