Published : 09 Dec 2019 04:45 PM
Last Updated : 09 Dec 2019 04:45 PM

பழநி மலைக்கோயிலுக்கு 2-வது ரோப்கார் அமைக்கும் பணிகள் மும்முரம்: பிரான்ஸ் நாட்டு நிபுணர் குழுவினர் ஆய்வு

பழநி

பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு செல்ல இரண்டாவது ரோப்கார் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை துரிதப்படுத்த பிரான்ஸ் நாட்டு நிபுணர்குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு செல்ல படிப்பாதை, இழுவைரயில் (வின்ச்), ரோப்கார் என மூன்று வழிகள் உள்ளன.

இதில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ரோப்காரில் செல்ல அதிகம் விரும்புவதாலும், மூன்று நிமிடங்களில் மலைக்கோயிலை சென்றடையலாம் என்பதாலும் ரோப்காரில் செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

இதனால் நீண்டநேரம் காத்திருந்து பயணிக்கவேண்டிய நிலை பக்தர்களுக்கு உள்ளது. இதைத்தவிர்க்க கூடுதலாக ஒரு ரோப்கார் மையம் அமைத்து பக்தர்கள் எளிதாக மலைக்கோயில் சென்றுவர இரண்டாவது ரோப்கார் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 73 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போமா ஹெட்டெக் என்ற நிறுவனம் இரண்டாவது ரோப்கார் அமைக்கும் பணியை மேற்கொண்டுவருகிறது. பிரான்ஸ் நாட்டு நிறுவனம், இப்காட் எரிக் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பணிகளை செய்துவருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் முதற்கட்ட பணிகளை பிரான்ஸ்

நாட்டு நிறுவனத்தை சேர்ந்த திட்டமேலாளர்கள் க்ளோயி, இப்கார் எரிக் நிறுவனத்தை சேர்ந்த ரவீந்தர்சிங் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் கூறுகையில், அதிநவீனதொழில்நுட்பங்களுடன் கூடிய ரோப்கார் அமைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் பராமரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது ரோப்கார் பணிகளை விரைவுபடுத்தவும், அடுத்த கட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது, என்றனர்.

மேலும், புதிய ரோப்கார் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 1200 பேர் மலைக்கோயில் செல்லவும், அங்கிருந்து கீழே இறங்கும் வகையிலும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர். ரோப்கார் திட்ட மேலாளர் வெங்கடாச்சலம், பொறியாளர் வெங்கட்ராமன், பழநி கோயில் பொறியாளர் ராம்குமார் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x