Last Updated : 09 Dec, 2019 02:22 PM

3  

Published : 09 Dec 2019 02:22 PM
Last Updated : 09 Dec 2019 02:22 PM

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கான வேரினை கண்டறியுங்கள்: கிரண்பேடி

கிரண்பேடி: கோப்புப்படம்

புதுச்சேரி

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கான மூலக்காரணத்தை நிவர்த்தி செய்வது அவசியம் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். சிறந்த பெற்றோர், கல்வி, பீட் போலீஸ் முறையும், குற்றவாளிகளை அடையாளம் காணும் போலீஸ் முறையை வலுப்படுத்துவது ஆகியவற்றினால்தான் பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்களை தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான கிரண்பேடி தற்போது நாட்டில் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பாக திறந்த மடலை இன்று (டிச.9) காலை வெளியிட்டார். அதன் விவரம்:

"பிரச்சினையின் ஆணிவேரானது சிறந்த பெற்றோர் மற்றும் பள்ளிக் கல்வி இல்லாதது தான். போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய போது குற்றம்சாட்டப்பட்டிருந்த பலருடன் உரையாடியுள்ளேன். பின்னர் சிறை நிர்வாக பொறுப்பாளராகவும் இருந்தேன். என் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் குடும்ப ஆலோசனை மையங்களை நடத்தி வருகிறேன். அவற்றின் மூலம் கிடைத்த பதில்களின் அடிப்படையில் குடும்பங்களில் இருந்து ஏற்படும் புறக்கணிப்பும், தவறான பழக்கங்களும்தான் இக்குற்றங்களுக்கு முக்கியமானதாகிறது. பள்ளியில் படிப்பை பாதியில் நிறுத்தியோர், வழிகாட்டுதலின்றி பெற்றோரும், ஆசிரியர்களும் கைவிட்ட பலரும் அதில் அதிகளவில் குற்றம்சாட்டப்பட்டோரில் இருந்தனர். குறிப்பாக தங்கள் குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது பற்றி விசாரிக்க பெற்றோர் தயக்கம் காட்டக்கூடாது.

கவனிக்கப்படாத குழந்தை குற்றவாளியாக மாற சாத்தியகூறுண்டு. கவனிப்பின்றி எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடும் முன்பு குற்றங்களின் தாக்கங்களில் இருந்து குழந்தையை காத்து, அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை பெற்றோரும், பள்ளியும் ஏற்பது அவசியம்.

குற்றவாளியாக உருவாகுவோரை அடையாளம் காணும் சூழலை போலீஸ் அமைப்பு தவற விட்டுள்ளது. எங்கிருந்து உருவாகிறார்கள் என்பதை கண்டவறிவதில் போலீஸ் தவறிவிட்டது. தொடக்க நிலையிலேயே அடையாளம் கண்டு தடுத்தால் அவர்கள் முறையற்றவர்களாக மாற மாட்டார்கள். முக்கியமாக சமூகம் அலட்சியமாகி விட்டது.

சமூகம் நமக்கு பதிலடி தரும் என்ற அச்சமும் பலருக்கு விலகி விட்டது. அதனால்தான் பீட் போலீஸ் அமைப்பு தேவை அதிகரித்துள்ளது. பீட் போலீஸ் முறைப்படி குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் போலீஸார் வைத்திருப்பது அவசியம். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு அவசியம். அத்துடன் மக்களுடன், பஞ்சாயத்து அமைப்புகளுடன் இணைந்த கண்காணிப்பு குழுக்களையும் போலீஸார் தேவைப்படும் பகுதிகளில் அமைக்க வேண்டும்.

போலீஸார் இக்குற்றங்களுக்கான வேரினை கண்டறிவதில் அதிகம் முக்கியத்துவம் தர வேண்டும். குறிப்பாக தொடக்க நிலையில் பணிபுரியும் போலீஸாருக்கு தேவையான வசதிகளை அரசு செய்து தருவது அவசியம். மொபைல் போலீஸ் அமைப்பை தேவையான அளவு உருவாக்கி அவசர அழைப்புகளுக்கு மட்டும் விரைந்து பயன்படுத்துவது பல குற்றங்களை தடுக்கும்.

குறிப்பாக ஜாமீனிலில் வெளிவரும் குற்றவாளிகள், தண்டனை அனுபவித்தோர் ஆகியோரை கண்காணிக்கும் பொறுப்பும் பீட் போலீஸாருக்கு உண்டு.

பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் ஒரே எண்ணத்துடன் நம்முடைய வேதனையாக எடுத்து கொள்ளாவிட்டால், இச்சம்பவங்கள் தொடரும் வாய்ப்பு ஏற்படும். அத்துடன் சூழல் ரீதியாகவும் பாதிக்கப்படும். எதை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த இடமும், நேரமும் இல்லாமல் ஊடகங்கள் இயங்கும் நிலையுள்ளது. ஒரு பயங்கரமான சுற்றுச்சூழலில் வாழ்கிறோம். என்ன செய்ய முடியும் உறுதியாக நாம் அறிந்து கூட்டாகவும், அவசர உணர்வோடும் இவ்விஷயத்தில் செயல்படுவதும் அவசியம்," என தன் கடிதத்தில் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x