Published : 09 Dec 2019 09:19 AM
Last Updated : 09 Dec 2019 09:19 AM

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் குறைவு: துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு

மதுரையில் நடந்த துக்ளக் பொன் விழாக் கூட்டத்தில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி. அருகில் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், பத்திரிகையாளர் மாலன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வழக்கறிஞர் சுமதி. படம் ஜி. மூர்த்தி

மதுரை

பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசினார்.

மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் துக்ளக் இதழின் பொன் விழா சிறப்புக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாஜக மாநிலச் செயலர் சீனிவாசன் வரவேற்றார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே. வாசன், பத்திரிகையாளர் மாலன், வழக்கறிஞர் சுமதி, தொழிலதிபர் கருமுத்து கண்ணன், ஜல்லிக்கட்டுப் பேரவை மாநிலத் தலைவர் பிஆர். ராஜசேகரன் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது:

தமிழகத்தில் அரசியல், ஆன்மிகம், கலாச்சாரம் காயப்பட்டுக் கிடக்கிறது. தமிழக அரசியல் கலாச்சாரம் அழிந்துவிட்டது. ஆனால் ஆன்மிகக் கலாச்சாரம் அழியவில்லை என்பது எனது கருத்து. 1970-ம் ஆண்டு கருப்புச் சட்டைகளை அணிந்து 400 இந்து தெய்வங்களை மோசமாக சித்தரித்தனர்.

தற்போது தமிழகத்தில் இருந்து ஒரு கோடி பேர் கருப்புச் சட்டை அணிந்து சபரிமலைக்குச் செல்கின்றனர். திராவிடக் கட்சிகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்துள்ளது. திராவிடப் பாரம்பரியம் தமிழகத்தில் இல்லை. அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியலில் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆருக்கு பெருமைஎம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாதபோது, கோயிலில் தீ மிதித்தனர், வேல் குத்தினர். அப்போது எங்கே போனது திராவிடம். தமிழகத்தை மாற்றிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.

அவர் கோயிலுக்குச் சென்றால் அறிவித்துவிட்டுச் செல்வார். தமிழகம் திராவிட கலாச்சாரத்தை அறவே ஒதுக்கிவிட்டது என்பது எனது கருத்து. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் இங்கு பேசினார்கள். பெண்களை நாம் மதிக்கிறோம்.

கலாச்சாரமும், சமூகமும் இணைந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும். பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் உட்பட பிற குற்றங்களும் குறைவு. காரணம் சமுதாயம் குற்றங்களைக் கண்காணிக்கிறது. இவ்வாறு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x