Published : 08 Dec 2019 04:53 PM
Last Updated : 08 Dec 2019 04:53 PM
தமிழக அரசின் கல்வி டிவி சேனல் ஒருங்கிணைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், புதிய ஒருங்கிணைப்பாளரை நியமித்து கல்வி டிவி சேனலின் தரத்தை மேம்படுத்தவும் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை வளர்நகரைச் சேர்ந்த ஆர்.அருண் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் கே.நீலமேகம் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "தமிழக அரசு சார்பில் கல்வி டிவி 26.8.2019-ல் தொடங்கப்பட்டது. இந்த சேனல் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
கல்வி டிவி ஒருங்கிணைப்பாளராக அமலன் ஜெரோம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலம் கொளத்தூர் எஸ்.எஸ்.காட்டுவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பெயரளவில் பணிபுரிந்து, கடந்த 4 ஆண்டுகளாக பணிக்கு செல்லாமல் சம்பளம் பெற்று வருகிறார்.
கடந்த 2017- 2018 கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில்பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, ‘தாயெனப்படுவது தமிழ்’, ‘உலகெல்லாம் தமிழ்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.
இத்திட்டப்படி இசை, நடனம், அனிமேஷன் போன் யுக்திகளை பயன்படுத்தி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்கான சிடி தயாரிப்பு பணி அமலன் ஜெரோமின் மனைவி நடத்தி வரும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்நிறுவனம் சிடியை அரசிடம் கொடுப்பதற்கு முன்பாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்தது.
இது தொடர்பாக அமலன்ஜெரோம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் 29.1.2019-ல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசின் கல்வி டிவி ஏழை, எளிய கிராமப்புற குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கல்வி கற்றலை எளிமையாக்கவும், அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நோக்கம். இத்திட்டத்தை நிறைவேற்ற ஆற்றல், அறிவு, ஆளுமை உள்ள ஆயிரக்கணக்கான ஆசியர்களை விட்டு, ஊழல் வழக்கை சந்தித்து வரும் அமலன் ஜெரோமை கல்வி டிவி க்கு ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பது சட்டவிரோதம்.
எனவே ஊழல் வழக்கு அடிப்படையில் அமலன் ஜெரோமை பணி நீக்கம் செய்து, தகுதியானவர்களை கல்வி சேனலில் ஒருங்கிணைப்பாளராக நியமித்து கல்வி சேனலின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருக்கிறது.
இந்த மனு நாளை (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT