Published : 08 Dec 2019 04:19 PM
Last Updated : 08 Dec 2019 04:19 PM

பழநியில் செயல் இழந்த அரசுப் பேருந்தின் பிரேக்; ஓடும் பேருந்தில் இருந்து குதித்து டயர் முன் கல்லைப் போட்டு நிறுத்திய பயணிகள்

பழநியில் பிரேக் செயல்இழுந்ததால் டயரின் கல்லைப்போட்டு நிறுத்தப்பட்ட அரசு பேருந்து.

பழநி

பழநியில் அரசுப் பேருந்தின் பிரேக் செயல் இழந்ததால், பயணிகள் பேருந்தில் இருந்து குதித்து டயரில் கல்லைபோட்டு பேருந்தை நிறுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து ஆண்டிபட்டிக்கு அரசு நகரப் பேருந்து இன்று காலை சென்றுகொண்டிருந்தது. பழநி நகரில் உடுமலை சாலையில் சாமி தியேட்டர் பேருந்துநிறுத்தம் அருகே சென்றபோது பயணிகளை இறக்க பேருந்தின் பிரேக்கை ஓட்டுனர் அழுத்தியபோது பிரேக் செயல்இழந்தது தெரியவந்தது.

பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிற்காமல் சென்றது. இதையறிந்த பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். ஓடும் பேருந்தில் இருந்து சில பயணிகள் கீழே குதித்தனர். குதித்த பயணிகள் சிலர் சாலையோரம் இருந்த கற்களை எடுத்து முன்பக்க டயரில் போட்டு பேருந்தை நிறுத்தினர். சாலையில் நடந்து சென்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாதநிலையில் பேருந்தில் இருந்தவர்கள் கூச்சல் போட்டதால் அலறியடித்து ஓடினர். கல்லைபோட்டு நிறுத்தியதால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட அரசு நகர பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காததால் டயரில் கல்லை போட்டு நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்தது.

இருந்தும் அரசுப் பேருந்துகள் பராமரிப்பில் போக்குவரத்து கழக நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் இதுபோன்ற செயல்கள் அடிக்கடி நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x