Published : 08 Dec 2019 04:02 PM
Last Updated : 08 Dec 2019 04:02 PM
வெங்காய விளைச்சல் வீழ்ச்சிக்கு அடிப்படை மரபணு மாற்றுவிதைகளே காரணம், என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விளைவிக்கப்பட்டுள்ள வெங்காயச் செடிகளை வயல்வெளிகளுக்குச் சென்று பார்வையிட்ட தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திண்டுக்கல், கரூர், திருப்பூர் மாவட்டங்களில் கண்வழி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகளிடம் விதைகளை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய மறுத்து ஒரு கிலோ ரூ.ஆயிரம், 1500 என குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வியாபாரிகள் விதைகளை வாங்குகின்றனர்.
இதை பெருவணிகர்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஒரு கிலோ ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தேவையான மழை பெய்திருந்தும், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு போன்ற அணைகள் தூர்வாரி பராமரிப்பு செய்யாததால் முழுஅளவு நீரை சேமிக்க முடியாதநிலை உள்ளது.
வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் வழியாக செல்லும் நீர், தண்ணீர் திறக்கப்பட்ட முதல்நாளே கரைகளை உடைத்துக்கொண்டு வெளியேறுகிறது. இதற்கு பெருச்சாலி வகை எலிகள் கரையை உடைத்தவிட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் கூறுவது நகைச்சுவையாக உள்ளது. தரமற்ற பணிகளே இதற்கு காரணம்.
இந்தியா முழுவதும் வெங்காயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் உற்பத்தி செய்த விவசாயிகள் மிகப்பெரும் அழிவை சந்தித்துள்ளனர். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் பாரம்பரிய நாட்டு வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் 75 முதல் 90 நாட்களில் அறுவடை செய்து மகசூல் பெற்றுள்ளனர்.
இதனை நீண்டநாள் இருப்பு வைத்து விற்கமுடியும். ஆனால் பெரும்பகுதியான விவசாயிகளிடம் மகசூல் பெறுக்கள் என்ற பெயரில் 150 நாட்கள் வயதுடைய இருப்பு வைக்க இயலாத வீரிய ஒட்டுவிதைகள் என்ற பெயரில் மரபணு மாற்று விதைகளை பயன்படுத்தி சாகுபடி செய்ததால் கொடிய நோய் தாக்குதலுக்குள்ளாகி விளைநிலத்திலேயே அழுகி வருகிறது.
இதனை இருப்பு வைத்து விற்பனை செய்யவும் முடியாது. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தேவைக்கு இறக்குமதி என்ற பெயரில் பதுக்கல்காரர்கள் கொள்ளை லாபம் அடித்து விவசாயிகளை அழித்துவிட்டனர். மரபணு மாற்று விதைகளை தடைசெய்து உற்பத்தியை பெருக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT