Published : 08 Dec 2019 11:56 AM
Last Updated : 08 Dec 2019 11:56 AM

ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டும்; உயர்த்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க வேண்டுமே தவிர, உயர்த்தக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மத்திய அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்குடன் ஜி.எஸ்.டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரி விகிதங்களை உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன. பொருளாதார மந்த நிலையால் மக்கள் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த வரி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும்.

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தொடக்கம் முதல் நடப்பாண்டின் முதல் பாதிவரை ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் இதுவரை இல்லாத அளவாக ரூ.1.13 லட்சம் கோடியாக உயர்ந்த நிலையில், பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் ஜி.எஸ்.டி வசூல் ஒரு லட்சம் கோடிக்கும் கீழாக குறைந்து விட்டது. இதனால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை சமாளிப்பதற்காகவே ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்தப்படவுள்ளது.

ஜி.எஸ்.டி வரிவிகிதம் மொத்தம் 3 நிலைகளில் உயர்த்தப்படவுள்ளது. இப்போதைய நிலையில் பல்வேறு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பொருட்களுக்கு 5%, 12%, 18%, 28% ஆகிய விகிதங்களில் ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டு வருகிறது. வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் சிலவற்றை வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவது; குறைந்தபட்ச வரியாக 5 விழுக்காட்டை 9-10% ஆக உயர்த்துவது, 12% வரி விகிதத்தை ஒழித்து விட்டு, அப்பிரிவில் உள்ள 243 பொருட்களை 18% பிரிவுக்கு கொண்டு செல்வது ஆகியவை தான் ஜி.எஸ்.டி குழுவின் உத்தேச வரி உயர்வு திட்டமாகும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வரி வருவாய் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே உள்ளது. ஜி.எஸ்.டி விதிகளின் படி மாநில அரசுகளுக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி வருவாயின் வளர்ச்சி ஆண்டுக்கு 14 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் அதை ஈடுகட்டுவதற்காக ஜி.எஸ்.டி மீது கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனாலும், மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க முடியாமல் மத்திய அரசு திணறிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் ஜி.எஸ்.டி வசூலை அதிகரிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால், அதற்கு ஆக்கப்பூர்வமாக பல்வேறு வழிகள் இருக்கும் நிலையில், ஜி.எஸ்.டி வரி விகிதங்களை உயர்த்தும் முடிவுக்கு மத்திய, மாநில அரசுகள் செல்வது ஏன்? என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் வினா ஆகும்.

ஜி.எஸ்.டி வரியை உயர்த்துவது என்பது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானதாகும். வரியை உயர்த்துவதால் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுமானால் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால், அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஜி.எஸ்.டி குழுவின் உறுப்பினர்கள் எவரும் சிந்தித்ததாக தெரியவில்லை. உலக அளவில் ஜி.எஸ்.டி வரி விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா முக்கியமானதாகும். நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசிவடைந்ததற்கு முக்கியக் காரணம் அதிக ஜி.எஸ்.டி வரிவிகிதம் தான் என்பதை அனைவரும் அறிவர்.

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது சராசரி வரிவிகிதம் 14.4% ஆக இருந்தது. பின்னர் வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகு சராசரி வரி விகிதம் 11.6% ஆக குறைந்தது. இப்போது திட்டமிடப்பட்டுள்ள வரி உயர்வு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் சராசரி வரி விகிதம் 20% ஆக உயரும். இது சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை விட மூன்று மடங்கு அதிகமாகும். ஜி.எஸ்.டி விகிதம் 11.6% ஆக இருந்த போதே பொருளாதார வளர்ச்சி குறைந்த நிலையில், ஜி.எஸ்.டி விகிதத்தை 20% ஆக உயர்த்திய பிறகு பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்ப்பது முரண்பாடுகளின் உச்சம் ஆகும். இது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு உதவாது.

பொருளாதார மந்தநிலை தென்படத் தொடங்கிய போது, அதை போக்குவதற்காக பெரு நிறுவனங்களின் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22% ஆக மத்திய அரசு குறைத்தது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பெருநிறுவனங்களுக்கு வரி குறைப்பு, சிறு நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் வரி உயர்வு என்பது நல்ல பொருளாதாரக் கொள்கை அல்ல.

இது சிறு தொழில்கள் மற்றும் வணிகத்தின் வீழ்ச்சிக்கு தான் வழிவகுக்கும். எனவே, ஜி.எஸ்.டி வரி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தை ஜி.எஸ்.டி குழு கைவிட வேண்டும். மாறாக, வரி விகிதங்களை குறைத்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் மூலம் வருவாயைப் பெருக்க ஜி.எஸ்.டி குழு முன்வர வேண்டும். பொருளாதார மந்த நிலையைப் போக்கி, வளர்ச்சிப் பாதையில் நாட்டை அழைத்துச் செல்ல இந்த அணுகுமுறை தான் உதவும்’’ என ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x