Published : 07 Dec 2019 04:49 PM
Last Updated : 07 Dec 2019 04:49 PM
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் மூலம் பல நூறு ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பெரிய கண்மாய் கரையோரப் பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக கல்லூரி மாணவர்கள் சிலர் குழி தோண்டினர். அப்போது, சிதைந்த நிலையில் சில சுடுமண் ஓடுகள் கிடைத்தன.
ஆர்வமடைந்த மாணவர்கள் மேலும், தோண்டியபோது முதுமக்கள் தாழிகள் இருப்பது தெரியவந்தது. மாணவர்கள் அதை வெளியே எடுத்தபோது அருகிலிருந்த பொதுமக்கள் திரண்டுவந்து ஆச்சர்யத்துடன் பார்வையிட்டனர்.
இதேபோன்று, கண்மாயில் மேலும் பல இடங்களில் சுடுமண் ஓடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விடங்களிலும் இதுபோன்ற முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்கால பொருள்கள் புதைந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுடுமன் ஓடுகள், முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அருப்புக்கோட்டை பெரிய கண்மாயிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வரலாற்று ஆய்வாளர்களிடையே ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்ற இடங்களைப் போன்று அருப்புக்கோட்டை பெரிய கண்மாயிலும் கள ஆய்வு நடத்தி வரலாற்றுச் சான்றுகளை தொல்லியத்துறையினர் சேகரித்து பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT