Published : 19 Aug 2015 02:38 PM
Last Updated : 19 Aug 2015 02:38 PM

வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த காட்டுப் பாதையில் 8 கி.மீ. நடந்து சென்று படிக்கும் குழந்தைகள்

கொடைக்கானல் அருகே குடிநீர், சாலை வசதி, பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் பெருங்காடு மலைக் கிராம மக்களின் வாழ்க்கை இருண்டுபோய் உள்ளது.

கொடைக்கானலில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ளது பெருங்காடு மலைக் கிராமம். இந்த ஊரில் 124 பழங்குடி ஆதிவாசி குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ஆரம்ப காலத்தில் மலைத்தேன் எடுப்பது, வனவிலங்குகளை வேட்டையாடுவது உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, வனத்துறையினரின் கெடுபிடியால் இக்கிராமத்தினர் விவசாயக்கூலி வேலைக்கு செல்கின்றனர். தற்போது அந்த வேலை கிடைப்பதும் அரிதாகி விட்டதால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உணவுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் மொத்தம் 47 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 8 குழந்தைகள் மட்டும், தினமும் 8 கி.மீ. நடந்துசென்று பள்ளங்கி, கோம்பைக்காடு பள்ளிகளில் படிக்கின்றனர். இப்பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உண்டு உறைவிடப் பள்ளி முன்பு செயல்பட்டு வந்தது. ஆனால், இந்தப் பள்ளியில் பணிபுரிய ஆசிரியர்கள் யாரும் வர மறுத்ததால், தற்போது உண்டு உறைவிடப் பள்ளி மூடப்பட்டு விட்டது. அதனால், இப்பகுதி குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகி விட்டது.

இதுகுறித்து வைகை தொண்டு நிறுவன இயக்குநர் அண்ணாத்துரை கூறியது:

இந்த கிராம மக்கள், குடிநீர், சாலை வசதியில்லாமல் வெளியு லகத்தோடு தொடர்பும் இன்றி தனித்தீவாக வசித்து வருகின்றனர். குடிநீருக்காக 8 கி.மீ. நடந்துசென்று அடர்ந்த காட்டில் ஊற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். அந்த ஊற்றிலும் ஒரு மணி நேரத் துக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் சுரக்கிறது.

கடந்த ஆண்டு, மழையில்லாத போது இந்த கிராமத்தில் சுகாதாரக் கேட்டால் 40 நாள்களில் அடுத்தடுத்து 6 குழந்தைகள் பலியாயினர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் பெருங்காடு கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தது. குடிநீருக்காக உறை கிணறும் தோண்டப்பட்டது. 28 அடியில் தண்ணீர் வந்தும், தற்போது வரை மோட்டார் பொருத்தப்படவில்லை. அதனால், இப்பகுதி மக்கள் பல மாதங்களாக குளிக்காமல் சுகாதாரமின்றி இருப்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி மர்ம நோய்கள் பரவி வருகிறது.

இந்த கிராம மக்கள் வேறு எந்த வசதியும் கேட்கவில்லை. குடிக்க தண்ணீரும், குழந்தைகள் படிக்க பள்ளிக் கூடமும், மற்ற கிராமங்களுக்கு எளிதில் சென்று வர சாலை வசதியும்தான் கேட்கின்றனர். இந்த வசதிகளைக் கூட பஞ்சாயத்து நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் செய்துதர அக்கறை காட்டவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசனிடம் கேட்டபோது, பெருங்காடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க பஞ்சா யத்துத் தலைவரிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன். எம்எல்ஏ, எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் நிதி ஒதுக்கினால், அங்கு ஆய்வுசெய்து சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கொடைக்கானலில் வனவிலங்குகள் நடமாட்டமுள்ள ஒற்றையடிப் பாதையில் தினமும் 8 கி.மீ. நடந்து பள்ளிக்குச் சென்றுவரும் பெருங்காடு கிராமக் குழந்தைகள்.

பள்ளி செல்லாத 39 குழந்தைகள்

இதுகுறித்து அண்ணாத்துரை மேலும் கூறுகையில், பெருங்காடு கிராமத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு சாலை வசதி கிடையாது. கொடிய வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள கரடுமுரடான ஒற்றையடிப் பாதைதான் உள்ளது. இந்த வழியாக இப்பகுதியைச் சேர்ந்த 8 குழந்தைகள் மட்டும் தினமும் 8 கி.மீ. நடந்து சென்று பள்ளங்கி, கோம்பைக்காடு பள்ளிகளில் படித்து வருகின்றனர். காட்டுப் பகுதியில் காலணி அணியாமல் செல்வதால், இந்தக் குழந்தைகளை அட்டைப் பூச்சிகள் கடித்து விடுகின்றன. அதனால், விஷப் பூச்சிகளுக்கு பயந்து பள்ளிக்குச் செல்லாமல் 39 குழந்தைகள் வீட்டிலேயே உள்ளனர். இக்கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்படுகிறது. இங்கு அங்கன்வாடி ஆசிரியர் வருவதே இல்லை. இந்த ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர், வாரம் முறை குழந்தைகளுக்கு சத்துணவு மட்டும் சமைத்து வழங்குகிறார். அதனால், அங்கன்வாடி மையம் இருந்தும் இப்பகுதி குழந்தைகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x