Published : 07 Dec 2019 02:40 PM
Last Updated : 07 Dec 2019 02:40 PM

கஞ்சா வழக்கில் இளைஞரைக் கைது செய்து போலீஸார் தாக்கு: விருதுநகர் எஸ்.பி. அலுவலகத்தில் 7 கிராம மக்கள் முற்றுகை

விருதுநகர்

விருதுநகர் அருகே சின்னதாதம்பட்டியில் இளைஞர் ஒருவரை கஞ்சா வழக்கில் போலீஸார் கைது செய்து தாக்கியதைக் கண்டித்து 7 கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று புகார் அளித்தனர்.

விருதுநகர் அருகே உள்ள சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் முனியசாமி (26). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி சூலக்கரை போலீஸார் கடந்த 29-ம் தேதி கைதுசெய்தனர். மேலும், இவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ சஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், கைதுசெய்யப்பட்ட முனியசாமியை போலீஸார் கண்மூடித் தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறு. பாதம், கால்கள் மற்றும் கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த முனியசாமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், முனியசாமி மீது பொய்வழக்குப் போடப்பட்டதாகக் கூறி சின்னதாதம்பட்டி, பெரியதாதம்பட்டி, சூலக்கரை, மீசலூர் உள்ளிட்ட 7 கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் சத்தியமூர்த்தி மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் பலரும் குவிந்தனர்.

பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதையடுத்து, போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி தடுத்து நிறுத்தினர்.

முனியசாமியின் பெற்றோர் மற்றும் முக்கிய நபர்கள் சிலர் மட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாளை சந்தித்து, முனியசாமி மீது பொய்வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும், அவரை கண்மூடித்தனமாகத் தாக்கிய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் மனு அளித்தனர்.

அதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது விசாரணை நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாள் தெரிவித்தார். இதுகுறித்து முனியசாமியின் உறவினர்கள் கூறுகையில், முனிசயாமிக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. முனியசாமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கும் முன்பகை இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே முனியசாமி மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தது மட்டுமின்றி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x