Published : 15 Aug 2015 04:01 PM
Last Updated : 15 Aug 2015 04:01 PM

அப்துல் கலாம் நினைவாக சுதந்திர தினத்தன்று ஒரு லட்சம் மரக்கன்று நடும் இயக்கத்தை தனிநபராக துவங்கிய மாற்றுத்திறனாளி

இந்தியாவின் 69 சுதந்திரத் தினத்தன்று மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக ஒரு லட்சம் மரக்கன்று நடும் இயக்கத்தை ராமநாதபுரத்தைச் சார்ந்த மாற்றுத் திறனாளி துவங்கினார்.

ராமநாதபுரம் திருநகரைச் சார்ந்த விஜயசாமி என்பவரின் மகன் மணிகண்டன் (33). இவரது தந்தை விஜயசாமி சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

காரைக்குடியில் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது கிரிக்கெட் விளையாட்டில் தவறி விழுந்து முட்டியில் அடிப்பட்டு பின்னர் அவரது இடது கால் முழுவதையும் துண்டிக்க வேண்டியதாயிற்று.

தனது ஒரு காலை முழுமையாக இழந்த நிலையிலும் தளராமல் மணிகண்டன் எம்.காம், பி.எட், பி.லிட், கூட்டறவு பட்டயம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தார்.

அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் இல்லாததால் மற்றவர்களைபோல, தனது ஒரு காலுடன் சைக்கிள் ஓட்ட கடுமையாக பயிற்சியில் பெற்று அதிலும் வெற்றி கண்டார். தற்போது மணிகண்டனுக்கு திருமணமாகி மனைவியும் 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த ஜுலை 27 அன்று மாரடைப்பால் காலமான முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா முழுவதும் பேரணிகளும், அஞ்சலிக் கூட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில் மாற்றுத் திறனாளியான மணிகண்டன் வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக்க வனத்துறையினரிடமிருந்து ஒரு லட்சம் மரக்க கன்றுகள் பெற்று ''கலாம் மரக்கன்று நடும் இயக்கத்தை'' அவரது பேக்கரும்பு நினைவிடத்தில் சனிக்கிழமை துவங்கினார்.

முதல் மரக்கன்றை கலாமின் பேரனான ஷேக் சலிமிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து ராமேசுவரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 100 கன்றுகளை நட்டார்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளியான மணிகண்டன் தி இந்துவிடம் கூறியதாவது, உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னால் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அப்துல் கலாம் பேக்கரும்பில் புதைக்கப்படவில்லை மாறாக விதைக்கப்பட்டிருக்கிறார்.

மறைந்த அப்துல் கலாம் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு என்று 10 உறுதிமொழிகளைக் கொடுத்துள்ளார். அதில் ஒன்று ''என் வீட்டில், எனது பள்ளியில் குறைந்த பட்சம் 10 மரக்கன்றுகளையாவது நட்டு பாதுகாத்து வளர்ப்பேன். இதன் மூலம் பசுமையான பூமி, சுத்தமான எரிசக்திக்காக பாடுபடுவேன்'' என்பதாகும்.

வீட்டிற்கு குறைந்த பட்சம் ஒரு மரமாவது இந்தியர்கள் அனைவரும் நட வேண்டும் என்கிற கனவைத் தூண்டியவர் கலாம். அவரது கனவை நனவாக்கும் விதத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை வனத்துறையினரிடம் பெற்று வறட்சிக்கு பெயர் போன எனது மாவட்டம் ராமநாதபுரம் முழுவதும் மரம் நடும் பதிவை இன்று அவரது பேக்கரும்பு நினைவிடத்தில் துவங்கியுள்ளேன். இந்த மரங்களை எல்லாம் அதிகப்பட்சம் ஒராண்டு அவகாசத்திற்கு நட்டுவிடுவேன். அதனைத் தொடர்ந்து கலாமின் 2020 வல்லரசு கனவுவினை கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலும் சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளேன், என்றார் நம்பிக்கையுடன்.

முன்னதாக மணிகண்டன் கடந்த 2013ம் ஆண்டில் இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை தடுத்தல், குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழித்தல், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் முழுமையாக கல்வி கற்க வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலும் தமது ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x