Published : 07 Dec 2019 08:20 AM
Last Updated : 07 Dec 2019 08:20 AM

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய விதைநெல் பாதுகாப்பு மையம் தொடக்கம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் நேற்று தொடங்கப்பட்டது.

மறைந்த நெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவு தினம், அவர் பாரம்பரிய முறைப்படி நெல்சாகுபடி மேற்கொண்ட ஊரான திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிரெங்கத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருவாரூர் வேலுடையார் கல்விக் குழுமத் தலைவர் தியாகபாரி கலந்துகொண்டு, நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய விதைநெல் பாதுகாப்பு மையத்தின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தார். வர்த்தக சங்க மாநில துணைத் தலைவர் சீனு சின்னப்பா, கிரியேட் அமைப்பின் தலைவர் துரைசிங்கம், நெல் ஜெயராமனின் மனைவி சித்ரா, ஆதிரெங்கம் கிரியேட் பண்ணையின் ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘‘தமிழகம் முழுவதும் பரவலாகத் தன்னார்வத்துடன் விவசாயிகள் மேற்கொண்டுவரும் பாரம்பரிய நெல் சாகுபடியின் மூலம் கிடைக்கப்பெற்ற பாரம்பரிய விதைநெல் வகைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல்பாதுகாப்பு மையம்’ மேற்கொள்ளும். மேலும், இம்மையம் விதைவங்கியாகவும் செயல்பட உள்ளது’’என மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் தெரிவித்தார்.

தொடர்ந்து, கட்டிமேட்டில் நடைபெற்ற புகழஞ்சலிக் கூட்டத்தில், பாரம்பரிய முறைப்படி நெல் சாகுபடியைச் சிறப்பாகச் செய்துவரும் விவசாயிகளை தேர்வு செய்து நெல் ஜெயராமன் பெயரில் தமிழகஅரசு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தாய்மண் பாரம்பரிய வேளாண்சார் நிறுவனம், கிரியேட் அமைப்பு,வேலுடையார் மேல்நிலைப் பள்ளிசார்பில் நடத்தப்பட்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியையொட்டி, மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று நெல் ஜெயராமனின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x