Published : 07 Dec 2019 07:27 AM
Last Updated : 07 Dec 2019 07:27 AM
எஸ். முஹம்மது ராஃபி
பாரம்பரிய நெல் ரகங்களின் பெயரில் தமிழகத்தின் பல்வேறுஊர்களின் பெயர் அமைந்துள்ளதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த பகுதிகளில் சிறப்பாக இருக்கும் தாவரங்கள், பறவைகள், விலங்குகள், நில அமைப்புகள், நீர் அமைப்புகளைக் கொண்டு அவ்வூருக்கு பெயரிடுவது சங்க காலம் முதலே தமிழரின் வழக்கம். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 72 ஊர்கள் ‘கோட்டை’ என பெயர் பெற்றுள்ளன. கற்கோட்டைகளால் அவ்வூர்களுக்கு இப்பெயர் ஏற்படவில்லை. நெல் விளையும் கோட்டைகள் என்பதால் அப்பெயர் பெற்றுள்ளன.
ஊர்ப்பெயர்கள் பற்றி ஆய்வு செய்துவரும் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு.
சூரன்குறுவை, வாலான், கூரன், நரியன், புழுதிக்கார், புழுதிவிரட்டி, அரியான் ஆகிய பாரம்பரிய நெல்களின் பெயர்கள், பல்வேறு ஊர்களின் பெயர்களாக சூட்டப்பட்டுள்ளதை அவர் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து வே.ராஜகுரு கூறியதாவது:‘சூரன்குறுவை’ நெல் 130 நாட்களில் வளரும் தன்மை உடையது. கரும்பழுப்பு நிறம் கொண்டது. இந்த நெல் பல கோட்டைகள் விளைந்ததால் ராமநாதபுரம், தருமபுரி மாவட்டங்களில் சூரன்கோட்டை என்ற பெயர், பல ஊர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சூரங்காடு, சூரங்குளம், சூரங்குடி ஆகிய பெயர்களிலும் பல ஊர்கள் உள்ளன.
‘வாலான்’ என்ற நெல், 160 நாட்களில் வளரக்கூடியது. நெல் முனையில் வால் போன்று காணப்படும். இந்த அரிசியைத் தொடர்ந்து சாப்பிடுவதால், பித்தம்,வயிறு சம்பந்தமான நோய்கள்நீங்குகின்றன. ராமநாதபுரம் அருகில் வாலான்தரவை, சாயல்குடி அருகில் வாலம்பட்டி, பரமக்குடி அருகில் வாலான்குடி எனஇந்த நெல்லின் பெயரில் பல ஊர்கள் உருவாகியுள்ளன.
‘கூரன்’ என்னும் பாரம்பரிய நெல்வகை குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நெல் தற்போது புழக்கத்தில் இல்லை எனத் தெரிகிறது. சாயல்குடி அருகில் உள்ள கூரன்கோட்டை எனும் ஊர், கூரன் நெல்லின் பெயரால் அமைந்துள்ளதை அறியமுடிகிறது.
நரியன், புழுதிக்கார்
‘நரியன்’ ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரியமாக பயிரிடப்படும் பெருநெல்வகையாகும். இதன் பெயரில் நரியனேந்தல், கீழநரியன், நரியம்பட்டி, நரியன்கொல்லை, நரியனேரி, நரியன்கோட்டை, நரியனூர் என 30-க்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழகம் முழுவதும் உள்ளன.
100 நாளில் விளையும் ‘புழுதிவிரட்டி’ எனும் மட்டநெல் ரகம்,கடும் வறட்சியிலும் காற்றில் உள்ள ஈரப்பதத்தைக் கொண்டு வளரக்கூடியது. அதேபோல், ‘புழுதிக்கார்’ எனும் ரகம் மானாவாரி, இறவைப் பகுதிகளில் செழித்து வளரக்கூடிய, நேரடி நெல் விதைப்பு முறைக்கு ஏற்றது. சராசரியாக 130 செ.மீ. வளரக்கூடிய, சிவப்பு நிறமுடைய தடித்த நெல் ரகமாகும். இவற்றின் பெயரால் புழுதிக்குளம், புழுதிக்குட்டை, புழுதிப்பட்டி, புழுதியூர், புழுதிக்குடி என பல ஊர்கள் உருவாகியுள்ளன.
‘அரியான்’ நெல், 120 நாட்களில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. இது கடலோரப்பகுதி, ஆற்றுப்படுகைகளில் உள்ள மணற்பாங்கான நிலங்களில் நன்கு வளரும். அரியான்கோட்டை, அரியான்வயல், அரியனேந்தல், அரியானூர், அரியான்குண்டு என தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட ஊர்கள் அரியான் எனும் நெல் பெயரில் உள்ளன. இவ்வாறு ராஜகுரு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT